ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் அண்ணா பல்கலைக்கழகத்தில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையம்




நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை, அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற பின்னர் அந்த வாக்குப்பதிவு எந்திரம், வி.வி.பாடு எந்திரங்கள் உள்ளிட்டவைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமநாதபுரம் தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கட்டிடத்தில் வைக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அண்ணா பல்கலைக்கழக மையத்தில் வைத்து வருகிற ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகிறது. அதற்காக அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணிக்கை மையத்தை தயார் செய்யும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை மையம்

6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்களையும் தனித்தனி அறைகளில் வைப்பதற்கு வசதியாக இரும்பு கம்பிகளை கொண்டு வாக்குப்பதிவு மையம் தயார் செய்யும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. மேலும் வாக்குப்பதிவு எந்திரம் வைத்து எண்ணப்படும் அறைகளில் கம்பிகள் வைத்து வெல்டிங் செய்தும், கம்பிகளில் புதிய வர்ணங்கள் அடித்தும் அறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இதை தவிர வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க வசதியாக இரும்பு கம்பிகளால் ஆன டேபிள் அமைக்கப்பட்டு தனியாக சிறப்பு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் தயாராகி வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை அவ்வப்போது மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு சந்திரன் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments