கோடை வெயிலால் ஏற்படும் தோல் பாதிப்புகளை தடுப்பது எப்படி? தோல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எஸ்.ஆதித்தன் விளக்கம்




உடலின் உள் இயங்கும் அனைத்து உறுப்புகளையும் வெளிப்புற தட்பவெப்ப மாறுபாடு மற்றும் கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாத்து உடலை பாதுகாக்கும் அரணாக தோல் செயல்படுகிறது.கோடையின் சுட்டெரிக்கும் கடும் வெப்பத்தினால் தோல் பகுதி சில பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.இந்த கடுமையான கோடை காலத்தில் தோல் பகுதியில் ஏற்படும் சில பாதிப்புகள் மற்றும் தோல் பாதுகாப்பு பற்றி மதுரை ஆண்டாள்புரத்தில் உள்ள ஆதித்தன் தோல் மருத்துவமனை நிபுணர் டாக்டர் எம்.எஸ்.ஆதித்தன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

முகப்பருக்கள்

கோடையில் உடலில் ஏற்படும் அதிக வெப்பத்தை தணிக்க உருவாகும் வியர்வை காரணமாக தோல் பகுதி சுரப்பியில் ஏற்படும் எண்ணெய் சுரப்பால் தோல் காயாமல் இருக்க உதவுகிறது.சில நேரங்களில் இந்த எண்ணெய் சுரப்பு தோலில் இருக்கும் துளைகளை அடைப்பதால் பருக்கள் உருவாகிறது.இதனை தடுக்க தினமும் 3 முதல் 4 தடவை முகத்தை நன்கு கழுவ வேண்டும்.மருத்துவரின் பரிந்துரைப்படி கிரீம்களை பயன்படுத்தலாம்.

பூஞ்சை தொற்று

தோல் பகுதியில் சில பூஞ்சைகள் காணப்படலாம்.வெயில் காலத்தில் இந்த பூஞ்சைகள் அதிக அளவில் பரவி கழுத்து மற்றும் தோள் பட்டை பகுதிகளில் நிற மாற்றம் மற்றும் செதில்களை உருவாக்கும். தினமும் இரு வேளை குளிப்பதன் மூலம் இதனை தடுக்கலாம்.பாதிப்பு தீவிரமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி கிருமி தடுப்பு மருந்துகளை எடுக்கலாம்.

தோல் அலற்சி

வெளிப்புற சூழலில் இருந்து தொற்று காரணமாக தோலில் சொரி மற்றும் ஒவ்வாமை ஏற்படும்.இதனை காண்டக்ட் டெர்மடைடிஸ் என்கிறோம்.இதன் காரணமாக, தோல் நிற மாற்றம், அரிப்பு, தோல் உரிதல், வீக்கம், கட்டிகள் ஏற்படலாம்.இதனை தடுக்க பாதிக்கப்பட்ட பகுதியை இளம் சூடான நீரில் கழுவவும்.

அரிப்பு

கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வியர்வை சில நேரங்களில் தோல் மடிப்புகள் மற்றும் தோலின் அடிப்பகுதியில் தேங்கி வியர்வை சுரப்பிகளை அடைத்து விடும் போது அரிப்பு ஏற்படுவதுடன் தோலில் சிறிய கொப்புளங்கள் மற்றும் கழலைகள் ஏற்படும்.இந்த பாதிப்பு ஒரு நாட்களில் தானாக சரியாகி விடலாம்.இதனை தடுக்க பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை பயன்படுத்துவது கூடாது.

பாலிகுலிடிஸ் அல்லது தோல் தொற்று

இது மயிர்க்கால்களை பாதிக்கக்கூடிய ஒரு வகை தொற்றுநோய்.பொதுவாக, தலை, கழுத்துபகுதி, அக்குள், இடுப்பு மற்றும் பிட்டம் பகுதிகளில் தோல் பாதிப்பு காணப்படும்.பாக்டீரியா, பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுகிறது.மயிர்க்கால்கள் அருகில் சிவந்த புடைப்புகள் காணப்படும்.அரிப்பு மற்றும தோல் எரிச்சல் இருக்கலாம்.

தோல் பாதுகாப்பு

வெயில் காலத்தில் காலை 10 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.வெயிலில் புற ஊதாக்கதிர்களால் தோல் பாதிப்பை தடுக்க தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி எஸ்.பி.எப்.20 க்கும் அதிகம் உள்ள சன்ஸ்கீரின் கீரீம்களை தோலில் தடவிக் கொண்டு 20 நிமிடங்கள் கழித்து வெளியில் செல்லலாம்.ஒரு தடவை தடவிய சன் ஸ்கீரின் க்ரீம் அதிகபட்சம் 4 மணி நேரங்கள் தான் தோலுக்கு பாதுகாப்பு தரும்.தொடர்ந்து வெயிலில் பயணப்படும் போது 4 மணி நேரங்களுக்கு ஒரு முறை இந்த க்ரீமை பயன்படுத்தவும்.

உடையின் முக்கியம்

உடலுக்கு குளுமை, தோல் சுவாசிக்கும் வகையில் காற்றோட்டம் தருவது மற்றும் வியர்வையை எளிதில் உறிஞ்சுவது பருத்தி ஆடைகள் தான்.எனவே, வெயில் காலத்தில் நைலான், பாலீஸ்டர் மற்றும் இதர செயற்கை ஆடைகளை தவிர்த்து மெலிதான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.குறிப்பாக, வெண்மை நிற பருத்தி ஆடை வெயில் காலத்தில் அணிய வேண்டும்.

உடல் தூய்மை

வெயில் காலத்தில் உடல் முழுவதும் வியர்வை படிந்து அக்குள், தொடை இடுக்குகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைக்காளான் அதிகரிக்கும் என்பதால் தினமும் உடலை நன்கு தேய்த்து இரண்டு முறை குளிக்க வேண்டும்.தோல் வியாதிகளை தடுக்க மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான சோப்புகளை பயன்படுத்தலாம்.

போதிய அளவு தண்ணீர்

உடலின் வெப்பநிலையை சரியாக பராமரிக்க வெயில் காலத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.தர்ப்பூசணி, இளநீர், பதநீர், நுங்கு, வெள்ளரிக்காய் போன்ற இயற்கையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

எச்சரிக்கை

குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டாம்.குழந்தைகளின் உடலில் வெயில் காலத்தில் கட்டிகளோ கொப்புளங்களோ ஏற்பட்டால் நீங்களாக அம்மை என்று முடிவு செய்து சுய மருத்துவம் செய்யக்கூடாது.மருத்துவரிடம் காட்டி சரியான சிகிச்சை அளிப்பதன் மூலமே தோல் நோய்களை கண்டறிந்து சரியான மருத்துவம் செய்து குணமடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments