வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? வண்ண அடையாள அட்டை வேண்டுமா? உங்களது வாக்குச்சாவடி எங்கு இருக்கிறது? ‘கியூ ஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம்




வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? வண்ண அடையாள அட்டை வேண்டுமா? உங்களது வாக்குச்சாவடி மையம் எங்கு இருக்கிறது? என்பன போன்ற விவரங்களை கீழே உள்ள ‘கியூ ஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம்.

விழிப்புணர்வு பாடல்

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர முந்தைய தேர்தல்களில் குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில், அதிக வாக்கு சதவீதத்தை கொண்டு வருவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு “உன் உரிமை, உன் கடமை, 18 வயது தொட்டால் துள்ளி குதிக்கும் மனமே” என்று தமிழில் தேர்தல் விழிப்புணர்வு பாடலை பாடி யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளார். சுமார் 3.32 நிமிடம் ஓடும் அந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்து உள்ளார். அந்த பாடல் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆன்லைன் வசதி

இதற்கிடையில் பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?, எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டும் உள்பட பல்வேறு விஷயங்களை எளிதில் தெரிந்து கொள்வதற்கான ஆன்லைன் வசதியை தேர்தல் கமிஷன் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த காலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதும், அதில் திருத்தம் மேற்கொள்வதும் குதிரை கொம்பு போன்றது. மக்கள் அலையாய் அலைந்து திரிய வேண்டும். அதுமட்டுமின்ற நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும், ஆனால் அதில் வேறு யாராவது புகைப்படம் இருக்கும்.

அதேபோல் நாம் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றால் உங்களது ஓட்டு இங்கு இல்லை என்று சொல்வார்கள். மேலும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா? என்பதனை கண்டுபிடிப்பது கடலில் போட்ட குண்டூசியை தேடுவது போல் இருக்கும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஆன்லைன் முறையால் வாக்காளர் அட்டை தொடர்பான அனைத்து சேவைகளும் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது முதல் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் தனித்தனி இணையதளம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

வாக்குச்சாவடி மையம்?

https://electoralsearch.eci.gov.in/pollingstation என்ற இணைய பக்கத்தில் நமது வாக்காளர் அடையாள எண்ணை பதிவு செய்தால் நமக்கான சட்டசபை-நாடாளுமன்ற தொகுதி எது?, நமக்கான வாக்குச்சாவடி மையம் எது?, வாக்குச்சாவடி நிலை அதிகாரி, தேர்தல் பதிவு அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோரது பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

வண்ண அட்டை
 
https://voters.eci.gov.in/login என்ற பக்கத்தின் மூலம் நமது வண்ண வாக்காளர் அடையாள அட்டையை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதலில் இந்த பக்கத்தில், நமது செல்போன் கொடுத்து, கடவு சொல் (Password) பதிவு செய்ய வேண்டும். பின்னர் செல்போன் நம்பர், வாக்காளர் அட்டை நம்பர், இ-மெயில் என ஏதாவது ஒன்றை உள்ளீடு செய்து கடவு சொல் கொடுத்து உள்ளே நுழைய வேண்டும். பின்னர் நமது வாக்காளர் அடையாள எண்ணை சமர்ப்பித்து செல்போனுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) பதிவு செய்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.


பெயர் இருக்கிறதா?

பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதனை https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது வாக்காளர் பெயர் மற்றும் தொகுதி அல்லது செல்போன் எண் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


உங்களுக்கு தெரியுமா?
 
ஓட்டுப்போடும் முறை காலத்துக்கு ஏற்ற வகையில் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு மன்னர் ஆட்சி காலத்தில், குடவோலை முறை இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அது வாக்குச்சீட்டு முறை ஆனது. அதன் அடிப்படையிலேயே, நாடாளுமன்ற தேர்தல் 13 முறை நடந்தது. அதிலும் கடந்த 1996-ம் ஆண்டுதான் வாக்குச்சீட்டு அடிப்பதற்கு அதிக அளவில் காகிதம் பயன்படுத்தப்பட்டது.

1996-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8,800 டன் (ஒரு டன் என்பது, ஆயிரம் கிலோ) காகிதமும், 1999-ம் ஆண்டு 7,700 டன் காகிதமும் பயன்படுத்தப்பட்டது. காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் அடிப்படையிலேயே தேர்தல்கள் நடந்து வருகின்றன.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து, யாருக்கு நாம் வாக்களித்தோம் என்பதை காட்சிப்படுத்தும் ‘விவிபாட்' எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை தெரிவிக்கும் ‘நோட்டா'வும் அதே தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments