அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட ராமநாதபுரம் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு




ராமநாதபுரம் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் 24 மணி நேரமும் 261 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு அறையில்..

ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன. அதை தொடர்ந்து சீல் வைக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் பார்வையாளர் பண்டாரி யாதவ், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம்- 338, பரமக்குடி (தனி) -303, முதுகுளத்தூர்- 386, திருவாடானை -347, திருச்சுழி- 276, அறந்தாங்கி-284 என மொத்தம் 1934 வாக்குச்சாவடிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. வரும் ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணும் வரை இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

24 மணி நேர பாதுகாப்பு

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. துப்பாக்கி ஏந்திய மத்திய போலீசார், தமிழ்நாடு போலீசார், சிறப்பு காவல் படையினர் 261 பேர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மத்திய போலீசார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைப்பகுதியிலும், அதற்கு அடுத்து சிறப்பு காவல் படையினரும், அதற்கு அடுத்து தமிழ்நாடு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் அதிநவீன வாகனங்களுடன் தீயணைப்புத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இந்த கல்லூரி வளாகம் முழுவதும் 260 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின்னணு வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments