இந்தியாவில் வாக்களிக்க தகுதி இருந்தும் 18 கோடி பேருக்கு ஓட்டு இல்லை என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்?




இந்தியாவில் தகுதி இருந்தும் 18 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேராமல் உள்ளனர். அவர்களை பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

100 சதவீத இலக்கு

இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக வைத்து தேர்தல் ஆணையம் பணியாற்றுகிறது. ஆனாலும் 19-ந் தேதி நடந்து முடிந்த முதல்கட்ட தேர்தலில் வெறும் 60 சதவீத வாக்குப்பதிவு மட்டுமே நடந்து உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கு என்பது வெறும் கானல் நீராக உள்ளது.

100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதில்லை என்ற கேள்விக்கு நாம் விடை தேடும் முன்பு, இந்தியர்களுக்கு வாக்களிப்பதில் முழு வாய்ப்பு அளிக்கப்படுகிறதா என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 141 கோடி. அதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் தோராயமாக 115 கோடி இருக்கிறது. இந்த எண்ணிக்கையில் உள்ள அனைவரும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் இந்த தேர்தலிலே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் மொத்தம் 97 கோடி பேர் தான் இருக்கிறார்கள். அப்படியென்றால் மீதமுள்ள 18 கோடி பேர் ஏன் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை? அவர்கள் எங்கே மாயமானார்கள். இதற்கான முழு பொறுப்பேற்க வேண்டியது தேர்தல் ஆணையம் தான். ஏனென்றால் வெறும் தேர்தல் நடத்துவது மட்டுமல்ல, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதும் அவர்கள் பணி தான்.

பிரச்சினை

இந்த முதல் பணியிலேயே தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விடுகிறது. ஒருவர் 18 வயது ஆகிவிட்டாலே, அவருக்கு ஓட்டு போடும் உரிமையை தேர்தல் ஆணையம் தானாக வழங்கி விடவேண்டும். மாறாக அவர்கள் வந்து விண்ணப்பித்தால் தான் உரிமை தருவோம் என்று சொல்லும் நடைமுறையை முதலில் மாற்றி அமைக்க வேண்டும். ஆதார் கார்டு, பான்கார்டு போன்று வாக்காளர் அடையாள அட்டையையும் எளிதாக பெறும் நடைமுறைகளை கொண்டு வரவேண்டும். தற்போது வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு 18 வயது ஆனவுடன் வாக்குசாவடி மையம் அல்லது ஆன்லைன் முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்கிறார்கள். ஆனால் இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து பட்டியலில் சேர்ப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து இருந்த வண்ணம் உள்ளன. அதனால் தான் கோடிக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் உள்ளன.

அதன்பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ந்துவிட்டாலும், அதன்பின் முகவரி மாற்றம் போன்றவற்றை செய்வதிலும் மக்கள் மிகப்பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். ஆதார் மையங்களில் ஆண்டு முழுவதும் முகவரி மாற்றம் செய்வது போல, வாக்காளர் அடையாள அட்டையிலும் முகவரியை ஆண்டு முழுவதும் மாற்றம் செய்வதற்கு சிறப்பு மையங்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்களை ஓட்டு போட வைப்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தகுதியான 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதும் மிக முக்கியமானது என்பதனை உணர வேண்டும். அதுவரை 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது சாத்தியமில்லை.

இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, ஒருவர் வெளிநாடு செல்வதற்கு நேரம் ஒதுக்கி பாஸ்போர்ட் வாங்குகிறார். அடையாளத்திற்கு ஆதாரும், வருமான வரி செலுத்த பான்கார்டும் பெறுகிறார். அதேபோல் நமது ஜனநாயக கடமையை நிறைவு செய்ய வாக்காளர் அட்டையையும் கொஞ்சம் சிரத்தையுடன் பெறவேண்டும். ஓட்டுப்பதிவு நாளன்று அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments