“அடையாள அட்டை இருக்கு... ஆனால் பட்டியலில் பெயர் இல்லை!” - கோபாலப்பட்டிணம் வாக்காளர்கள் ஏமாற்றம்! தேர்தல் அதிகாரிகள் கூறுவது என்ன?



அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கோபாலப்பட்டிணத்தில் வாக்களிக்க ஆர்வத்துடன் வந்த வாக்காளர்கள், பெயர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வாக்காளர் அடையாள அட்டை இருக்கு, ஆனால் பட்டியலில் பெயர் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இதே பிரச்சினையை மக்கள் சந்திக்கின்றனர். அதற்கு தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 1,13,582 ஆண் வாக்காளர்களும், 1,15,667 பெண் வாக்காளர்களும், 1 திருநங்கையும் என 2,29,250 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,29,250 பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. முதல் முறை வாக்காளர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை முதல் ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க அடையாள அட்டையுடன் சென்ற மக்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பட்டியலில் பெயர் இல்லை

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்கள் பலரின் வாக்குச்சாவடிகள் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இதனால் பலர் இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்பட்டனர்.

கோபாலப்பட்டிணம் அரசு தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களார் அடையாள அட்டையுடன் வாக்களிக்க சென்ற 50-க்கும் மேற்பட்ட மக்களை பட்டியலில் பெயர் இல்லை என கூறி அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வாக்களிக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.ஒவ்வொரு தேர்தலிலும் இந்த பிரச்சினை நீடிக்கிறது.

இது குறித்து அவர்கள் கூறும்போது: “நாங்கள் பல வருடங்களாக இங்கயே தான் வசித்து வருகிறோம். வேலை காரணமாக, சில நாட்கள் வெளியே சென்று வருகிறோம். எங்கள் பிள்ளைகள் படிப்பு, வேலை காரணமாக வெளியூர்களில் தங்கியுள்ளனர். ஆனால், தேர்தல் நாளில் வாக்களிக்க தவறியது கிடையாது. மக்களவை தேர்தலில் வாக்களிக்க சென்ற போது, பட்டியலில் பெயர் இல்லை என கூறி வாக்களிக்க அனுமதிக்க வில்லை. வாக்காளர் விவரங்களை அதிகாரிகள் சரியாக பதிவு செய்யவில்லை.

மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல்கள் என அனைத்து தேர்தலிலும் தவறாமல் வாக்கு செலுத்திய நிலையில், முதல் முறையாக வாக்கு செலுத்த முடியாமல் விட்டது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியவில்லை. ஒருவர் அந்த பகுதியில் வசித்து கொண்டு இருப்பது தெரிந்தும், எப்படி, பட்டியலில் இருந்து பெயரை நீக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, விசாரித்துதான் வாக்காளர் பட்டியலை தயார் செய்தார்களா என்பதும் தெரியவில்லை” என்றனர் ஆதங்கத்துடன்.

250-க்கும் மேற்பட்டோர் நீக்கம்

இதுகுறித்து கோபாலப்பட்டிணம் சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், கோபாலப்பட்டிணத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர்களை விட சுமார் 250- க்கும் மேற்பட்டோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு நீக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

பெண் ஒருவர் கூறுகையில், ‘‘என்னுடைய கணவருக்கு ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்கிறார்கள்’’ என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

நீக்கம்

இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:-

ஒருவர் தன்னிடம் அடையாள அட்டை இருக்கிறது. ஆனால் வாக்கு இல்லை என்று புகார் கூறுகிறார். நாம் எந்த பகுதியில் குடியிருக்கிறோமோ, குடிபெயர்கிறோமோ அந்த பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதுமானது. முன்பு எல்லாம் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டும், தேர்தலுக்கு முன்பும் மட்டுமே தயாரிக்கப்படும்.

4 மாதங்கள்

ஆனால் தற்போது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களின் 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது உடையவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே ஆண்டுக்கு 4 முறை பட்டியலில் பெயர் சேர்க்கவும், முகவரி மாற்றவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அதேபோல் இந்த தேர்தலுக்கு கடந்த மார்ச் 27-ந்தேதி வரை விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதனை அரசு அலுவலகங்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மட்டுமே சென்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் இப்போது ஒருவர், தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதனை ஆன்லைன் முறையில் எளிதாக பார்த்து விடலாம். இப்படி பல வாய்ப்புகளை எல்லாம் விட்டு, விட்டு தேர்தல் நாளன்று வந்து எனது பெயர் இல்லை என்று புகார் கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே இனி வருங்காலங்களில் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், உடனே பெயர் சேர்க்க மனு கொடுக்க வேண்டும். பின்னர் பட்டியலில் சேர்ந்து விட்டதா? என்பதனையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோபாலப்பட்டிணத்தில் கடந்த பிப்ரவரி மாதம் GPM மீடியா மற்றும் GPM மக்கள் மேடை இணைந்து இலவசமாக வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்ற முகாம் மூன்று நாட்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments