தொண்டி அருகே மீன்பிடி வலையில் சிக்கி காயம் அடைந்த டால்பினுக்கு சிகிச்சை 2 மணி நேரம் அளிக்கப்பட்டது




மீன்பிடி வலையில் சிக்கி காயம் அடைந்த டால்பினுக்கு 2 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வலையில் சிக்கிய டால்பின்

தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்ட தானம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாலசுப்பிரமணியன், முத்தமிழ், முத்துக்குமார், அன்பு, ஆகியோர் ஒரு நாட்டுப்படகில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது இவர்கள் வீசிய வலையில் அரிய வகை ஆண் டால்பின் சிக்கியது.

உடனே அந்த மீனவர்கள் தங்களது வலையை அறுத்து டால்பினை விடுவித்தனர். ஆனால் அதன் வாயில் காயம் ஏற்பட்டிருந்ததால் அவதிப்பட்டது. சற்று ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். அப்போதும் அந்த டால்பின் கடலுக்குள் செல்லாமல் அந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தது.

2 மணி நேரம் சிகிச்சை

உடனே அந்த மீனவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் உத்தரவின் பேரில் வன உயிரின சரக அலுவலர் திவ்யலட்சுமி, தொண்டி வனவர் நவிந்தன் மற்றும் கடல் உயிரின ஆராய்ச்சியாளர் ஸ்வேதா, உதவியாளர்கள் அஜித், பிரவீன், பாலாஜி ஆகியோர் விரைந்து வந்து, படகில் சென்று டால்பினை மீட்டு கடற்கரையோர கடல் பகுதிக்கு கொண்டு வந்தனர். கடலோரத்தில் பெரிய பேனரை விரித்து தொட்டி போன்று செய்து, அதில் டால்பினை நீந்த வைத்தனர். பின்னர் கால்நடை டாக்டர்கள் கவுரி, சக்திவேல் ஆகியோர் மூலம் டால்பினுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். சுமார் 2 மணி நேரம் டால்பின் அந்த தொட்டி போன்று செய்திருந்த இடத்தில் தண்ணீருக்குள் சுற்றி வந்தது. ஓரளவு சகஜ நிலையை அடைந்ததும் தானாகவே அது நீந்தி கடலுக்குள் சென்றுவிட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments