மீமிசலில் ரூ.111 கோடி போதைப்பொருள் சிக்கிய வழக்கில் இறால் பண்ணை உரிமையாளர் கைது




மீமிசலில் ரூ.111 கோடி போதைப்பொருள் சிக்கிய வழக்கில் இறால் பண்ணை உரிமையாளரை சுங்கத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.---

போதைப்பொருள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் இறால் பண்ணையில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்துவதற்காக போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருச்சி மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 10, 11-ந் தேதிகளில் சம்பந்தப்பட்ட இறால் பண்ணையில் சுங்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அந்த பண்ணையில் உள்ள ஒரு அறையில் ஹாசிஸ் எனப்படும் லேகியம் வடிவில் போதைப்பொருள் மற்றும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹாசிசும், ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலான 874 கிலோ கஞ்சாவும் என ரூ.111 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கியவர்கள் தலைமறைவாகினர்.

சுங்கத்துறையினர் விசாரணை

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அதனை திருச்சியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.111 கோடி போதைப்பொருளை எங்கிருந்து, எப்படி இறால் பண்ணைக்கு கொண்டு வந்தனர். இதன் பின்னணியில் யார்? யார்? உள்ளார்கள் என்பது தொடர்பாக தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் தலைமறைவான இறால் பண்ணையின் உரிமையாளரான ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.பட்டினத்தை சேர்ந்த முகமது சுல்தான் (வயது 54) மற்றும் சிலரையும் தேடி வந்தனர்.

பண்ணை உரிமையாளர் கைது

இந்த நிலையில் முகமது சுல்தானை திருச்சியில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். இதையடுத்து முகமது சுல்தானை வருகிற 9-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி பாபுலால் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து முகமது சுல்தானை திருச்சி மத்திய சிறையில் அடைக்க சுங்கத்துறையினர் அழைத்து சென்றனர். இதுகுறித்து சுங்கத்துறையினர் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் இறால் பண்ணையின் உரிமையாளர் முகமது சுல்தான் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஒருவரை கைது செய்ய வேண்டியுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments