கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி ஊராட்சியில்‘‘குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை’’நீர் பரிசோதனை அறிக்கையில் தகவல்!



கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை என நீர் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி ஊராட்சியில், குருவாண்டான் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியை சோ்ந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அவர்களுககு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டதற்கு காரணம் புரியாமல் அவர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் கலங்கலாக வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி சென்று பார்வையிட்டனர். அப்போது தொட்டியின் உள்ளே மாட்டு சாணம் கலந்திருப்பதாக கூறி அந்த கழிவை வெளியே எடுத்து வந்தனர். இதனை மர்ம ஆசாமிகள் தொட்டியில் கலந்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பினர்.

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி அந்த குடிநீர் மாதிரியை சேகரித்து திருச்சியில் உள்ள மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

இதில் அந்த நீரை பகுப்பாய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு நேற்று அறிக்கை வந்தது. இதில் குடிநீர் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும், நோய் கிருமி தொற்றுகள் ஏதும் இல்லை என்றும் அறிக்கை வந்தது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த அறிக்கையின் மூலம் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அந்த குடிநீர் குடிப்பதற்கு உகந்தது என்பதின் மூலம் அந்த தொட்டியில் கிடந்த கழிவு பொருள் மாட்டு சாணம் இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது'' என்றனர்.

மேலும் அதிகாரிகள் கூறுகையில், ‘‘குடிநீர் தொட்டியில் கிடந்த கழிவு பொருள் மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. அந்த கழிவு குடிநீர் தொட்டி கழுவப்படாமல் இருந்ததால் பாசி போன்று இருந்துள்ளது. இதனை மாட்டு சாணம் என கூறியுள்ளனர்'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments