வெப்ப அலையின் தாக்கம்: புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் இலவசமாக வழங்க ஏற்பாடு



புதுக்கோட்டையில் வெப்ப அலையின் தாக்கம் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்ப அலையின் தாக்கம் காணப்படுகிறது. இந்த நிலையில் வெப்ப அலை மற்றும் கோடை கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாக்க அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும், பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்லவும், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு-சர்க்கரை கரைசல், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும், அந்நேரத்தில் வெளியில் செல்லும்போது குடையை பயன்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் இலவசமாக வழங்க பொது சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 20 கிராம் எடையுள்ள ஒரு பாக்கெட் பவுடரை ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீரில் சரியான விகிதத்தில் கலந்து குடிக்க வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் டாக்டர்களின் அறிவுரையை பெற்று குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதேபோல் உள்ளாட்சி அமைப்புகள் வைக்கும் தண்ணீர் பந்தலிலும் ஓ.ஆர்.எஸ்.கரைசல் பவுடா் பாக்கெட்டும் வினியோகிக்கப்படும். மேலும் கரைசலை குடிநீரில் கலந்தும் வினியோகிக்கப்பட உள்ளது என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments