முத்துக்குடாவில் சுற்றுலா தல மேம்பாட்டு பணிகள் தீவிரம்!



முத்துக்குடாவில் சுற்றுலா தல மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களாக சித்தன்னவாசல், கலைஞர் கருணாநிதி பூங்கா, குடவரை கோவில்கள் உள்பட தொல்லியல் சார்ந்த இடங்கள் உள்ளன. மேலும் ஆன்மிக தலங்களும் அதிகமாக உள்ளன. பொழுதுபோக்கு அம்சமாக விளங்கக்கூடிய சுற்றுலா தலம் என்பது குறிப்பிடும்படி இல்லை.இந்த நிலையில் மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் சுற்றுலா தலம் அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் ரூ.3 கோடி செலவில் சுற்றுலா தலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதில் முத்துக்குடா கடற்கரை பகுதியில் நிர்வாக அலுவலகம், பொதுமக்கள் பொழுதை போக்கும் வகையில் பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளில் இதுவரை 70 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் மீதமுள்ள பணிகள் நிறைவடைய உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகள் முடிவடைந்ததும் படகு சவாரியும் தொடங்கப்பட உள்ளது. முத்துக்குடா கடலில் அலையாத்தி காடுகளை படகுகளில் சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு சுற்றி வரும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதில் எத்தனை படகுகள் வாங்குவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்பட உள்ளது. இந்த சுற்றுலா தல மேம்பாட்டு பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments