முதுகுளத்தூர் அருகே ஊருக்குள் போதைப்பொருட்களை பயன்படுத்த தடை! கிராம மக்கள் முடிவு!!



முதுகுளத்தூர் அருகே ஊருக்குள் போதை பொருட்களை பயன்படுத்த தடை விதித்து கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் பயன்படுத்தி வந்ததாகவும், இதனால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.

இதையடுத்து அந்த கிராம மக்கள் ஒன்றுகூடி கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில், மது உள்ளிட்ட போதைப்பொருட்களை கிராமத்தில் யாரும் பயன்படுத்தக்கூடாது. மீசல் கிராமத்தில் மது அருந்துபவர்கள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் வெளியூர் சென்று பயன்படுத்த வேண்டும்.

இந்த கிராமத்திற்குள் கட்டுப்பாடுகளை மீறி போதை பொருட்களை பயன்படுத்தினால் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக கிராம எல்லையில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அந்த பலகையில், ``மீசல் கிராமத்தில் பொது இடங்களில் மது மற்றும் போதை பொருட்களை உபயோகப்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எழுதப்பட்டு உள்ளது. இந்த தகவல் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பரவியுள்ளது. அங்கு இதுகுறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments