என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம் தரவரிசை பட்டியல் ஜூலை 10-ந்தேதி வெளியீடு




2024-25-ம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக். பி.ஆர்க். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்கான தரவரிசை பட்டியல் வருகிற ஜூலை மாதம் 10-ந்தேதி வெளியாகிறது.

என்ஜினீயரிங்விண்ணப்ப பதிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், அரசு பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 12 ஆயிரத்து 136 இடங்கள் உள்பட மொத்தம் 2 லட்சத்துக்கும் அதிகமான இளநிலை என்ஜினீயரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. தற்போது, மாநிலப்பாடத்திட்டத்தின் கீழ் படித்த பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வெழுதிய மாணவர்களில், 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிப்பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கி உள்ளது.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பி.இ., பி.டெக். மற்றும் பி.ஆர்க். ஆகிய என்ஜினீயரிங் படிப்புகளுக்குwww.tneaonline.org என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு ரூ.250-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு சேவை மையம்

இளநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் 110 தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேவை மையம் குறித்த விவரங்களை, www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். விண்ணப்ப பதிவு தொடர்பாக மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின், 1800-425-01110 என்ற எண்ணிற்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். மேலும், tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம்.

ஜூலை 10-ல்தரவரிசை பட்டியல்

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அடுத்த மாதம் (ஜூன்) 12-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேநாளில், மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் 13-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வருகிற ஜூலை 10-ந்தேதி வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி கமிஷனரும், தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை தலைவருமான வீரராகவராவ் அறிவித்துள்ளார்.

தரவரிசை பட்டியல் தொடர்பாக, குறைகள், கோரிக்கைகள் இருப்பின் மாணவர்கள் சேவை மையங்களில் வருகிற ஜூலை 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை முறையிடலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கவுன்சிலிங் எப்போது?
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு அடுத்த மாதம் 12-ந்தேதி நிறைவடைந்தபிறகு, வருகிற ஜூலை மாதம் 10-ந்தேதி தரவரிசை வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் எப்போது என்பது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தற்போது அறிவிப்பு வெளியிடவில்லை. ‘கவுன்சிலிங் தேதிகள் ஏ.ஐ.சி.டி.இ-யின் கல்விசார் அட்டவணைக்கு ஏற்ப அறிவிக்கப்படும்' என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், ஆகஸ்டு 2-ந்தேதி தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments