செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச் செல்வதால் பொன்னி நதிக்கு ‘காவிரி’ என பெயர். ‘கா’ என்றால் காடு, சோலை என பொருள். காவிரியும், அதன் கிளை நதிகளும் வங்கக்கடலுடன் கலக்கும் கழிமுகப்பரப்பில் ஆச்சரியங்களும், அதிசயங்களும், பேரழகும் நிறைந்த சோலைகளை காணலாம்.
முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டை போல இயற்கையின் ஆச்சரியங்கள் மறைந்திருக்கும் மற்றொரு காடு தான் கோடியக்கரையில் உள்ள பசுமை மாறாக்காடுகள்.
பசுஞ்சோலை
அருகில் வங்கக்கடல், சுற்றிலும் பசுமையான மரங்கள், அதனிடையே சுற்றித்திரியும் புள்ளிமான், வெளிமான் என மானினங்கள் என மனதை இயற்கையுடன் லயிக்க வைத்து பேரழகில் சொக்க வைக்கிறது கோடியக்கரை. கோடிக்கரை, கோடியக்கரை, காலிமர் முனை, கள்ளிமேடு என பல பெயர்களில் இந்த பசுஞ்சோலையை அழைக்கலாம். ராவணனை எதிர்த்து போரிட புறப்பட்ட ராமன், கோடியக்கரையில் நின்று இலங்கையை பார்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில் புராண காலத்துக்கு சுற்றுலா பயணிகளை ‘காலப்பயணமாக’ அழைத்துச்செல்கிறது கோடியக்கரை. இங்கு தொல்பொருள் ஆராய்ச்சித்துறையால் ‘ராமர் பாதம்’ நினைவிடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நாகையின் மணிமகுடம்
தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாயும் டெல்டா பகுதிகளை ஆண்ட சோழர்களின் சாம்ராஜ்யம் பறந்து விரிந்ததற்கு கடல் பயணமும் ஒரு காரணமாகும். கோடியக்கரை பகுதியானது இடைக்கால சோழர்கள் காலத்தில் துறைமுகமாக விளங்கியதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
ஆன்மிக தலங்களும், இயற்கை ஆர்வலர்கள் விரும்பும் இடங்களும் நிறைந்த நாகை மாவட்டத்துக்கு மற்றுமொரு மணிமகுடமாக அமைந்திருக்கிறது கோடியக்கரை. இங்கு விலங்குகள், பறவைகள் சரணாலயமும் அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
மன அழுத்தம் நீக்கும் சுற்றுலா
வங்காள விரிகுடாவும், பாக்ஜலசந்தியும் இணையும் பகுதியையொட்டி 30 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயம். இதன் எதிர்புறம் பறவைகளின் சொர்க்க பூமியாக சரணாலயம், சதுப்பு நிலப்பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் பள்ளி, படிப்பு, அலுவலகம், வேலை, வீடு, சமையல் என ஒரு போர்வைக்குள் அடைந்து கிடக்கும் மக்கள், பரந்து விரிந்த இந்த காட்டை சுற்றிப்பார்க்கும்போது மான்களும், குரங்குகளும், குதிரைகளும், நரிகளும் சுதந்திரமாக விளையாடுவதையும், ஆங்காங்கே மயில்களின் நடனத்தையும் கண்டு ரசித்து, உலகின் புற அழுத்தங்களில் இருந்து விடுபட்டு மனம் விட்டு பறக்கலாம். அந்த வகையில் மன அழுத்தத்தை நீக்கும் அருமருந்தாக கோடியக்கரை சுற்றுலா அமையும்.
வலசை வரும் பறவைகள்
ஈரான், ஈராக், ரஷியா, பாகிஸ்தான், சைபீரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வலசை வரும் புள்ளினங்கள்(பறவைகள்) கோடியக்கரையை வண்ணமயமாக்குகின்றன. இங்குள்ள நீர் நிலைகளில் ஒற்றைக்காலில் நின்று பறவைகள் இரை தேடிப்பிடிக்கும் காட்சியும், குழுவாக(குரூப்பாக) இறக்கை விரித்து பறந்து செல்லும் காட்சியும் அளவில்லா மகிழ்ச்சியை தரும்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 274 பறவை இனங்கள் கோடியக்கரை வானில் வண்ணக்கோலமிடுவதாக வனத்துறையினர் கூறுகிறார்கள்.
புராண கால சின்னங்கள்
இது குறித்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறுகையில், ‘கோடியக்கரையில் சீசன் நேரத்தில் பம்ப்ஹவுஸ், முனியப்பன் ஏரி, ராமர் பாதம், முனங்காடு, சவுக்கு பிளாட் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக எண்ணிக்கையில் பறவைகளை ரசிக்கலாம்.
கோடியக்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம், புராண கால நினைவுச்சின்னங்கள் உள்ளன. கோடியக்கரையை சுற்றிப்பார்க்க காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் உகந்த நேரம். சுற்றிப்பார்க்க வாகன வசதியும், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஓய்வு விடுதியும், பறவைகளை பார்ப்பதற்கு ‘பைனாகுலர்’ மற்றும் வழிகாட்டி வசதியும் உள்ளது’ என்றார். புராண காலத்தை மனதுக்குள் தடமாக பதிக்கும் ராமர் பாதம், சோழர் காலத்தை கண் முன் நிறுத்தும் கலங்கரை விளக்கம், குழந்தைகள் விரும்பும் விலங்குகள், பறவைகள், கடல் என சுற்றுலாவுக்கான ஒட்டுமொத்த சிறப்பம்சங்களையும் குத்தகைக்கு எடுத்துள்ளது கோடியக்கரை என்றால் அது மிகையாகாது!.
எப்படி செல்வது?
நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வேதாரண்யத்துக்கும், திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யத்துக்கும் அடிக்கடி பஸ் வசதிகள் உள்ளன. வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரைக்கு அடிக்கடி பஸ், கார் வசதிகள் உள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.