ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது! வீட்டில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது




பரங்கிப்பேட்டை அருகே ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மஞ்சக்குழி கிராமத்தில் குடிநீர் குழாய் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இந்த பணிகளை புவனகிரி அருகே பி.முட்லூரை சேர்ந்த பாண்டியன் மகன் சந்தோஷ் (வயது 33) என்பவர் செய்து வந்தார்.

இந்த நிலையில் மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் சற்குருநாதன், குடிநீர் குழாய் அமைத்தல், வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்ததற்காக தனக்கு 2 சதவீதம் கமிஷனாக ரூ.30 ஆயிரம் தரவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ், தன்னால் அவ்வளவு பணம் ஒரே நேரத்தில் தர முடியாது என கூறினார். அப்போது சற்குருநாதன், இரண்டு தவணைகளாக தலா ரூ.15 ஆயிரம் கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.

மடக்கி பிடித்த போலீசார்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ், இதுதொடர்பாக கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரைப்படி சந்தோஷ் நேற்று ரசாயன பொடி தடவிய ரூ.15 ஆயிரத்தை சற்குருநாதனிடம் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை சற்குருநாதன் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

முக்கிய ஆவணங்கள்

மேலும் மஞ்சக்குழியில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து சற்குருநாதனை, கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதோடு, வழக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர். ஊராட்சி மன்ற தலைவர் லஞ்ச வழக்கில் கைதான சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments