தொண்டியில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது




ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலப்பிரச்சினை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பெருமானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர், பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 42). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் ஒருவருக்கும் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இருதரப்பினரும் தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதற்கான ரசீதும் போடப்பட்டுள்ளது.

ரூ.2 ஆயிரம் லஞ்சம்

இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், “உங்கள் மீதான புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும்” என வேல்முருகனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு வேல்முருகன் பேரம் பேசி ரூ.2000 தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இது தொடர்பாக ராமநாதபுரம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

கைது

இதையடுத்து போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை வேல்முருகனிடம் கொடுத்து அனுப்பினர். அவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வைத்து, அந்த பண நோட்டுக்களை சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் ராமகிருஷ்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments