இந்திய கடல் எல்லைக்குள் வந்து கடல் அட்டைகளை பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது! கடலோர காவல் படையினர் நடவடிக்கை!!




இந்திய கடல் எல்லைக்குள் வந்து கடல் அட்டைகளை பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். மேலும் 5 பைபர் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

பைபர் படகுகள்

இந்திய-இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கடற்படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற படகில் கமாண்டர் பிரதீப்குமார் தலைமையில் ரோந்து சென்றபோது நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 நாட்டிக்கல் தொலைவில் சந்தேகத்துக்கு இடமாக பைபர் படகுகள் வந்தது தெரிய வந்தது.

14 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய எல்லையில் சிலிண்டர் சுவாச கருவி மூலம் இலங்கை மீனவர்கள், கடல் அட்டையை பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து 5 பைபர் படகுகளில் வந்த 14 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து துணை கமாண்டர் பழனி ராஜேஸ்வர் தலைமையில் இலங்கை மீனவர்களை நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை...

இதையடுத்து இலங்கை மீனவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த அப்துல் ரசாக் முகமது நாசர்(51), மன்னார்தாள்பாட்டை சேர்ந்த சுகிதரன்(40), திரிகோணமலையை சேர்ந்த பைரூஸ்(44), ஜக்கூர்(49), தினுசன்(42), அலாம்தீன்(46), ரெங்கன் பிரானுன்(42), உவய்ஸ்(59), சுமித் சஞ்சீவ்(37), ரஞ்சித் இந்திகர்(38), இர்பான்(42), நவ்ஷாத்(42), பருத்தித்துறையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணான்(43), கொட்டன் தீவை சேர்ந்த அமிர்தகுமார்(44) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்தது தெரிய வந்தது. இதுகுறித்து வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடல் அட்டைக்கு இலங்கையில் அனுமதி

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் கூறும்போது, கடல் அட்டையை பிடிப்பதற்கு இலங்கையில் அனுமதி உள்ளது. அனுமதி படிவத்துடன்தான் கடல் அட்டையை பிடித்து வருகிறோம். இலங்கை கடற்பரப்பில்தான் இன்று(அதாவது நேற்று) கடல் அட்டை பிடித்துக் கொண்டு இருந்தோம். ஆனால் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய எல்லைக்குள் வந்து விட்டோம். எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.

© 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments