நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் 19-ந்தேதிக்கு தள்ளிவைப்பு பயணிகள் ஏமாற்றம்




நாகை-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் 19-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து

நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதியுடன் இந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்்கு 13-ந் தேதி முதல் மீண்டும் "சிவகங்கை" என்ற பெயரில் புதிய கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மீண்டும் 19-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

இந்த நிலையில் சட்டரீதியான நடவடிக்கை காரணமாகவும், கப்பல் வருகை தாமதத்தாலும் திட்டமிட்டபடி நாகை-இலங்கை இடையே 13-ந் தேதி இயக்கப்படுவதாக இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து 17-ந்தேதிக்கு(அதாவது இன்று) மாற்றப்படுவதாக கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் கப்பல் போக்குவரத்து வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் அறிவித்து உள்ளது.

பயணிகள் ஏமாற்றம்

நாகை-இலங்கை இடையே நிறுத்தப்பட்டு இருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்ற அறிவிப்பால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் பயணிகள் கப்பல் சேவை மீண்டும், மீண்டும் மாற்றம் செய்யப்படுவதால் இந்த கப்பலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது அறிவித்துள்ளபடி வருகிற 19-ந்தேதியாவது கப்பல் போக்குவரத்து இயக்கப்படுமா? என பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments