திருமருகல் அருகே பரிதாபம்: குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழப்பு




திருமருகல் அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அண்ணன்-தம்பி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரபீக். இவருடைய மனைவி ரம்ஜான் பேகம். இவர்களுடைய மகன் ராசீத்(வயது 7).

அதே பகுதியை சேர்ந்தவர் நவுசாத் அலி. இவருடைய மனைவி நஜீலா பேகம் இவர்களது மகன் முகமது நபீஷ்(6). ரம்ஜான் பேகமும், நஜீலா பேகமும் உடன்பிறந்த அக்காள்-தங்கை ஆவர். இவர்களின் கணவர்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

குளத்தில் மூழ்கினர்

நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே ராசீத்தும், முகமதுநபீசும் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள அய்யனார் கோவில் குளத்தில் இறங்கியதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இந்த நிலையில் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகள் இருவரையும் காணாததால் அவர்களை இருவரின் தாயாரும் தேடிப்பார்த்தனர். அப்போது குளத்தின் கரையில் சைக்கிள் மட்டும் நிற்பது தெரிய வந்தது.

பரிதாப உயிரிழப்பு

இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் குளத்தில் இறங்கி தேடினர். அப்போது குளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த ராசீத், முகமது நபீஷ் ஆகியோரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அவர்களது தாயார்கள், சிறுவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments