புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை ஒரே நாளில் 260 மில்லி மீட்டர் பதிவு மேலும் மீமிசல்-49.20 மில்லி மீட்டர் மழை பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஒரே நாளில் 260 மில்லி மீட்டர் அளவு மழை பதிவானது.

கோடை மழை

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரிரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் காலை வரை தூறல் மழை போல பெய்தது. அதன்பின் பகலில் வெயில் அடிக்க தொடங்கியது.

இருப்பினும் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கோடை மழை பெய்யக்கூடிய மாவட்டத்தில் புதுக்கோட்டையும் இடம் பெற்றுள்ளது. நேற்று முதல் வருகிற 19-ந் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

கறம்பக்குடி பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வெயில் சுட்டெரித்து வந்தது. நீர்நிலைகள் வறண்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் இன்றி கிராம பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.

குடிநீர் கேட்டு பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை காலை 7 மணி வரை மிதமாகவும் அவ்வப்போது கன மழையாகவும் கொட்டி தீர்த்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

கறம்பக்குடி மழையூர், வெட்டன்விடுதி, சூரக்காடு, ரெகுநாதபுரம், அம்புக்கோவில், செங்கமேடு, முதலிப்பட்டி, திருமணஞ்சேரி, மஞ்சு விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை உழவு பணியை தொடங்க இந்த மழை உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குறுவை சாகுபடிக்கும் வாழை, கரும்பு, மரவள்ளி கிழங்கு, மற்றும் பூ வகைகளுக்கும் இந்த மழை உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

பயணிகள் அவதி

கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கறம்பக்குடி பங்களா குளத்திற்கு செல்லும் வரத்து வாய்க்காலில் சிலர் கட்டுமான பொருட்களை போட்டு அடைத்து வைத்திருப்பதால் வாய்க்காலில் தண்ணீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமமடைந்தனர்.

கறம்பக்குடியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் பயணிகள் அவதிபட்டனர். பஸ் நிலையத்திற்கு செல்ல முழங்கால் அளவு தண்ணீரை கடந்து செல்ல வேண்டி இருப்பதாக பலரும் வேதனை தெரிவித்தனர். எனவே கறம்பக்குடி பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணமேல்குடி

மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் மணமேல்குடி அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது.

மேலும் மணமேல்குடி உச்சமாகாளியம்மன் கோவில் தெரு, காந்தி நகர், குலச்சிறையார் நகர் ஆகிய தெருக்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமத்துக்கு உள்ளாகினர். அதிகாலையிலேயே தொடர்ந்து மழை பெய்ததால் காலையில் மீன்பிடிக்க செல்லக்கூடிய நாட்டுப்படகு மீனவர்கள் சற்று தாமதமாக மீன்பிடிக்க சென்றனர்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் பகுதியில் லேசான தூறல் மழை 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழச்சியடைந்தனர்.

கீரமங்கலம்

கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், சேந்தன்குடி, பனங்குளம், குளமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கீரமங்கலம் பகுதியில் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மின்கம்பிகளில் மரங்கள், தென்னை மட்டைகள் ஏராளமான இடங்களில் விழுந்து கிடந்தன. இதனை மின் ஊழியர்கள் அகற்றினர். மேலும் குளமங்கலம் பகுதியில் மரம் விழுந்து மின்கம்பங்கள் உடைந்தன.

மழை அளவு விவரம்

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 260.20 மில்லி மீட்டர் அளவு மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-4, புதுக்கோட்டை-1, ஆலங்குடி-7, கந்தா்வகோட்டை-3, கறம்பக்குடி-5, மழையூர்-5, அரிமளம்-4, அறந்தாங்கி-8, ஆயிங்குடி-8.20, நாகுடி-15.40, மீமிசல்-49.20, ஆவுடையார்கோவில்-27.80, மணமேல்குடி-111.80, இலுப்பூர்-3, அன்னவாசல்-2, விராலிமலை-2, உடையாளிப்பட்டி-1.40, கீரனூர்-2.40.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments