புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியில் கடத்தல் சம்பவம் அதிகரிப்பு கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து செல்ல கோரிக்கை




புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் கடத்தல் சம்பவம் அதிகரிக்கிறது. எனவே கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடத்தல் சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் மீன்பிடி இறங்குதளம் உள்ளன. இங்கிருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மேலும் மணமேல்குடி, கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். பாக்ஜலசந்தி கடல் பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதி அமைந்துள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கும், இலங்கையில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வழியாகவும் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.110 கோடி மதிப்பிலான கஞ்சா உள்பட போதைப்பொருள் சிக்கியது. இதேபோல் சமீபத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 14 கிலோ தங்கம் சிக்கியது.

கடலோர பாதுகாப்பு படை

மேலும் புதுக்கோட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பண்டல்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியை மையமாக வைத்து கடத்தல் சம்பவம் நடத்தப்படுவது ஏன்? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் இலங்கை அமைந்துள்ளது. கடலில் அலையும் அதிகமாக இருக்காது. இதனால் சாதாரண நாட்டுப்படகுகளில் கூட சென்று வர முடியும். கடலில் மத்திய கடலோர காவல் படையின் ரோந்து இந்த பகுதியில் குறைவு. இதனால் கடத்தல்காரர்கள் இப்பகுதியை தோ்ந்தெடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் போலீசார், அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணி அதிகரித்தால் இப்பகுதியில் கடத்தல் சம்பவம் குறைய வாய்ப்பு உள்ளது'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments