மணமேல்குடி அருகே கடற்கரை பகுதியில் 50 ஏக்கரில் காடு உருவாகுகிறது: அலையாத்தி செடிகள் நன்கு வளரத்தொடங்கின




மணமேல்குடி அருகே கடற்கரை பகுதியில் 50 ஏக்கரில் உருவாகும் காட்டில் விதைக்கப்பட்ட அலையாத்தி செடிகள் நன்கு வளரத்தொடங்கின.

அலையாத்தி காடு

கடற்கரை பகுதிகளில் அலையாத்தி காடுகள் இருப்பதை காணமுடியும். ஆற்று நீர், கடல் நீரோடு கலக்கும் இடங்களில் இயற்கை அரண்களாக அலையாத்தி காடுகள் விளங்குகின்றன. புயல், வெள்ளம், மண் அரிப்பு, கடல்நீர் பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதில் அலையாத்தி காடுகளின் பங்கு அதிகமாக உள்ளது.

கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதோடு, மீன்வளத்தை அதிகரிப்பதிலும் அலையாத்தி காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இதனை சதுப்பு நில காடுகள் என அழைப்பதும் உண்டு. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதி சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது. இதில் கடற்கரையோர பகுதிகளில் சில இடங்களில் அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. அலையாத்தி காடு அமைந்துள்ள முத்துக்குடா பகுதியில் சுற்றுலா தலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

50 ஏக்கர் பரப்பளவு

இந்த நிலையில் பசுமை தமிழகம் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி அருகே மும்பாலையில் கடற்கரை பகுதியில் அலையாத்தி காடு 50 ஏக்கரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பகுதியில் தெற்கு வெள்ளாறு கடலோடு கலக்கிறது. அலையாத்தி காடு உருவாக்குவதற்காக கடற்கரை பகுதியில் 1,600 மீட்டர் தொலைவிலும், 91 கிளைகள் பிரிந்து செல்லும் வகையிலும் வடிவமைத்து வாய்க்கால்கள் வெட்டப்பட்டுள்ளன.

மீன் முள் வடிவ தோற்றத்தில் இந்த அலையாத்தி காடு உருவாகுகிறது. சுமார் 44 ஆயிரத்து 100 அலையாத்தி செடி விதைகள் விதைக்கப்பட்டன. கடந்த ஆண்டில் விதைக்கப்பட்டவை தற்போது நன்கு வளரத் தொடங்கின. அலையாத்தி செடிகள் வளர்ந்து வரும் நிலையில் மரமாகி விரைவில் காட்டின் தோற்றம் அடைந்து விடும்.

பறவையினங்கள்

அலையாத்தி காடு அடர்த்தியாக காணப்படுவதை போல இந்த பகுதியிலும் அலையாத்தி காடு உருவாகும். இதன் மூலம் மீன் உள்பட கடல் வாழ் உயிரினத்தை பெருக்க பயனாக அமையும். கடல் நீர் பெருக்கெடுத்து கரைக்கு வர வாய்ப்புகள் குறையும்.

பறவையினங்கள் அதிகம் வந்து தங்குவதற்கு வசதியாக அமையும். வெளிநாட்டு பறவைகளும் வர வாய்ப்பு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments