புதுக்கோட்டை உள்பட 3 இடங்களில் மனதை மயக்கும் மரகத பூஞ்சோலை விரைவில் திறப்பு விழா காண்கிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் மனதை மயக்கும் மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டு, விரைவில் திறப்பு விழா காண உள்ளது.

மரகத பூஞ்சோலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொழுதுபோக்கு அம்சங்களாக பூங்காக்கள் பல உள்ளன. இருப்பினும் மரங்களை பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை எனும் பெயரில் பூங்கா அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே குப்பையன்பட்டி, கீரனூர் அருகே வாலியம்பட்டி, திருமயம் அருகே ஊனையூர் ஆகிய 3 இடங்களில் இந்த பூங்காக்கள் மனதை மயக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த பூங்காவில் சந்தனம், தேக்கு, செம்மரம், புங்கை, வில்வம் உள்பட 34-க்கும் மேற்பட்ட வகையிலான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் வனப்பகுதிகளை போல் இந்த பூஞ்சோலைகள் அமைந்துள்ளன.

மரக்கன்றுகள் நடவு

பூஞ்சோலையில் ராசி நட்சத்திரங்களுக்குரிய மரங்களும், பொதுமக்கள் அமரும் சிமெண்டிலான இருக்கைகளில் மரம் போன்ற தோற்றத்திலான வர்ணம் பூசப்பட்டும், இயற்கை எழிலோடு காணப்படுகிறது. மேலும் மூங்கில்களாலான திறந்த வெளி அறையும், நீர்வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடந்து செல்லவும், சுற்றிப்பார்க்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பூஞ்சோலைகளில் நுழையும் போது மக்கள் இயற்கையின் வனப்பகுதிக்குள் சென்று திரும்பிய நிலை கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 3 மரகத பூஞ்சோலைகளும் மொத்தம் ரூ.70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. தலா 2½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. தலா ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் திறப்பு விழா நடைபெறும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments