மீன்பிடி தடைக்காலத்தில் மோட்டார் பொருத்திய படகுகள் கடலுக்கு செல்வதை தடுக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு




மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்போது மோட்டார் பொருத்திய படகில் சென்று கடலில் மீன் பிடிப்பதை தடுக்க அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மீன்பிடி தடை காலம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அசன் முகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் சுமார் 300 பேர் விசைப்படகுகள் வைத்து மீன்பிடி தொழிலை பரம்பரையாக செய்து வருகின்றோம்.

கடந்த 2000-ம் ஆண்டு முதல் மத்திய அரசும், மாநில அரசும் நமது நாட்டின் உள்ள கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை அதிகரிக்கும் நோக்கோடு ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31-ந்தேதி என 61 நாட்கள் வரை மீன் பிடி தடைக்காலமாக அறிவித்துள்ளது.மீனவர்களுக்கு இந்த காலத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் மீன் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு அரசின் உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.

மோட்டார் பொருத்திய படகு

இந்நிலையில் அரசின் உத்தரவுக்கு எதிராக சிலர் நாட்டு படகுகள் என்ற பெயரில் என்ஜின் பொருத்தப்பட்ட படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

இதனால் மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் கடல் வளம் அழிக்கப்படுகிறது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மோட்டார் பொருத்தாத பாரம்பரிய படகில் சென்று மீன் பிடிக்க அரசு விலக்கு அளித்துள்ளது. இதனை தவறாக பயன்படுத்துகிறார்கள். எனவே மீன்பிடி தடைக்காலத்தில் மோட்டார் பொருத்தப்பட்ட படகுகளின் சென்று மீன் பிடிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

அரசுக்கு உத்தரவு

இந்த மனு அவசர வழக்காக நீதிபதிகள் மஞ்சுளா, குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் மீன்பிடிக்க எதன் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்கள்? இதனால் மீன்வளம் பாதிக்கப்படும் அல்லவா? என கேள்வி எழுப்பினர்.

முடிவில், இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments