சென்னை – திருச்சி இனி 4 மணி நேரம் தான்; வருகிறது தூத்துக்குடி வரை நீளும் புதிய எக்ஸ்பிரஸ்வே!




சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்க தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சமீபத்தில் நாடு முழுவதும் பாரத்மாலா பரியோஜனாவின் இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 6,747 கிமீ தூரத்திற்கு எக்ஸ்பிரஸ்வேகள் (விரைவுச் சாலைகள்), பொருளாதார வழித்தடங்கள் மற்றும் இடை-வழிச்சாலைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக ஆலோசகர்களை பணியமர்த்தி உள்ளது.

இந்த இரண்டாம் கட்ட திட்டத்தில் சென்னை – திருச்சி எக்ஸ்பிரஸ்வே இடம்பெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது. சென்னையிலிருந்து திருச்சிக்கு 4 மணி நேரத்தில் செல்லும் விதமாக இந்த எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்படும். இதனை கிரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே இருக்கும் வழித்தடத்தை பயன்படுத்தாமல் புதிய வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்படும். 

இதற்கிடையில், சென்னை - திருச்சி எக்ஸ்பிரஸ்வே திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் புதிய வழித்தடத்திற்கான பாதை, தொழில்நுட்ப வசதிகள், இணைப்பு சாலைகள், நிதித் தேவை, பொருளாதார வழித்தட திட்டம், கால அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இது 8 வழிச் சாலையாக அமைக்கப்படும். இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் சென்னை - திருச்சி இடையிலான பயண நேரம் வெறும் 4 மணி நேரமாக குறைந்துவிடும். பல்வேறு காரணங்களால் தாமதமாகி வரும் சென்னை – சேலம் எக்ஸ்பிரஸ்வேயை தொடர்ந்து தமிழ்நாட்டில் அமைக்கப்படும் இரண்டாவது எக்ஸ்பிரஸ்வே ஆக இந்த சாலை இருக்கும்.

இந்த திட்டத்திற்கு சுமார் 35,000 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை- திருச்சி விரைவுச்சாலை 310 கி.மீ நீளமும், பிள்ளையார்பட்டி- தூத்துக்குடி வழித்தடம் 160 கி.மீ நீளமும் இருக்கும். இதை சேர்த்து மொத்தமாக 470 கிமீ தூரத்திற்கு எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தென் மாவட்டங்கள் வரை நீட்டிக்கும் வகையில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை ஓர் இணைப்பு சாலையை ஏற்படுத்தி, அங்கிருந்து சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி வழியாக தூத்துக்குடி வரை இந்தச் சாலை நீட்டிக்கப்படும். இதில் தஞ்சாவூர் முதல் தூத்துக்குடி வரை 4 வழிச் சாலையாக அமைக்கப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments