கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் 403 விசைப்படகுகளை ஆய்வு செய்த அதிகாரிகள்




புதுக்கோட்டை மாவட்டத்தில் 403 விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மீன்பிடி தடைக்காலம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் மீன்பிடி இறங்குதளம் அமைந்துள்ளது. இங்கிருந்து விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதேபோல் மணமேல்குடி, கட்டுமாவடி உள்ளிட்ட கடற்கரை பகுதி மீனவர்கள் நாட்டுப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் 61 நாட்களுக்கு அமலானது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விசைப்படகுகளில் ஆய்வு

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். மேலும் தடைக்காலத்தில் படகுகளை மீனவர்கள் பராமரித்து தயாராக வைப்பார்கள். இதில் விசைப்படகுகளின் உரிமம், பராமரிப்பு, கடலுக்கு செல்லும் வகையில் பாதுகாப்பாக உள்ளதா?, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா? என்பது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

அந்த வகையில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் திருச்சி இணை இயக்குனர் ஷர்மிளா தலைமையில், புதுக்கோட்டை உதவி இயக்குனர் பஞ்சராஜா மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசைப்படகுகளை பார்வையிட்டனர். மொத்தம் 403 விசைப்படகுகளை ஆய்வு செய்துள்ளனர்.

மேலும் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததும் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி முதல் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர். வருகிற 5, 6-ந் தேதிகளில் நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments