கோடை விடுமுறையில் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்கள் அதிகம் வருகை கற்சிலைகளை முறையாக பராமரிக்க வேண்டுகோள்




கோடை விடுமுறையில் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்கள் அதிகம் வருகை தருகின்றனர். கற்சிலைகளை முறையாக பராமரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசு அருங்காட்சியகம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் 1910-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட இது தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கற்சிலைகள், கனிமங்கள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகைப்பொருட்கள், கூத்து கலைப்பொருட்கள், பனையோலைகள், உலோகப் படிமங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை புதுப்பிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டன. அதன்பின் அந்த பணிகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

கற்சிலைகள் சேதம்

இந்த நிலையில் கோடை விடுமுறையில் புதுக்கோட்டையில் அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்கள் அதிகம் வருகை தருகின்றனர். தினமும் சராசரியாக 150 முதல் 200 பேர் வரை வருகை தருகின்றனர். விசேஷ நாட்களில் பொதுமக்கள் வருகை அதிகரிக்கிறது. இந்த நிலையில் அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள கற்சிலைகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது.

அருங்காட்சியகத்தின் உள்ளே வளாகப்பகுதியில் திறந்தவெளியில் கற்சிலைகள் சில வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இதில் அதன் விவரத்தை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கற்களில் வெள்ளை நிற வர்ணத்தில் எழுதப்பட்டிருந்தன. இந்த நிலையில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளதில் கற்சிலைகள் சில சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. ஓரிரு சிலைகள் தரையில் கவிழ்ந்த நிலையில் கிடக்கிறது. மேலும் கற்சிலைகள் குறித்த விவரங்களின்எழுத்துக்கள் பல அழிந்து கிடக்கின்றன.

ஓவியங்கள்

அருங்காட்சியகத்தில் மற்ற பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிடுகின்றனர். இந்த கற்சிலைகளை காணும் போது முறையாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதை கண்டு வேதனை அடைகின்றனர். மேலும் எழுத்துக்கள் பல அழிந்து இருப்பதால் அந்த கற்சிலைகள் எந்த காலத்திலானது, எந்த பகுதியை சேர்ந்த சிலை என்பது உள்ளிட்ட விவரம் அறியமுடியாமல் போகிறது.

அருங்காட்சியகத்தின் உள் பகுதியில் பழமையான ஓவியங்கள், மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், புகைப்படங்கள் தனியாக தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசிக்கின்றனர். இதேபோல செல்போனிலும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

டைனோசர் உருவ பொம்மை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த உருவ பொம்மை எந்திரத்தால் இயக்கப்படுகிறது. சத்தம் எழுப்புதல், வாய் அசைவு மற்றும் உடல் அசைவு போன்றவை காண்பிக்கப்படும். இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்வையிட்டு ரசிக்கின்றனர். பொதுமக்கள் வருகை அதிகரித்த நிலையில் அருங்காட்சியகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், கற்சிலைகளின் விவரங்கள் அடங்கிய எழுத்துக்களை மீண்டும் எழுதவும், சிலைகளை பராமரித்து பாதுகாப்பான இடத்தில் பார்வைக்காக வைக்கவும், அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்கவும் பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments