ஒரத்தநாடு அருகே, முந்தி செல்லும் போட்டியில் தனியார் பஸ்கள் மோதல்; 10 பேர் படுகாயம்
ஒரத்தநாடு அருகே முந்தி செல்லும் போட்டியில் தனியார் பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் பஸ்கள் மோதல்

பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று மாலை இரண்டு தனியார் பஸ்கள் பயணிகளுடன் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்டுச் சென்ற நேரத்தில் இருந்தே யார் முந்தி சென்று பயணிகளை அதிகமாக ஏற்றுவது என்பதில் இரு பஸ் டிரைவர்களுக்கும் இடையே போட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

ஒரத்தநாட்டை அடுத்துள்ள சோழகன் குடிக்காடு அருகே சென்ற போது பின்னால் வந்த பஸ், முன்னால் சென்ற பஸ்சின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அந்த பஸ்சின் கண்ணாடி உள்ளிட்ட உதிரி பாகங்கள் உடைந்து நொறுங்கியது.

பயணிகள் 10 பேர் காயம்

இதை பார்த்து பஸ் பயணிகள் அலறினர். சிலர் காயங்களுடன் மயக்கம் அடைந்து பஸ்சுக்குள் விழுந்தனர். சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டனர்.இந்த விபத்தில் பின்னால் சென்ற பஸ்சின் முன் பகுதியில் அமர்ந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்களை கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு தனியார் பஸ்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யார் முந்தி சென்று பயணிகளை ஏற்றுவது என்ற போட்டியில் இரண்டு தனியார் பஸ்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments