சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்டன: நிழல் தரும் மரங்கள் இல்லாத கும்பகோணம்-மயிலாடுதுறை சாலை சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்
சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்டதால் நிழல் தரும் மரங்கள் இல்லாமல் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலை உள்ளது. 4 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

சாலை விரிவாக்க பணி

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மரங்களை வெட்டக்கூடாது என்று குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்புகளில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மரத்தை பாதுகாக்கவும், மரம் குறித்து முக்கியத்துவத்தை ஏற்படுத்தவும் மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மன்னர்கள் காலத்தில் இருந்து சாலையோரங்களில் நிழலுக்காகவே மரங்கள் நட்டு வைத்தனர். அவை அனைத்தும் நூற்றாண்டு காலங்கள் கடந்து சாலையோரங்களில் வளர்ந்து கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.

ஆனால் ஒரு சில இடங்களில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பெரும்பாலான இடங்களில் மரங்களை வெட்டிவிட்டு அதற்கு பதிலாக வேறு நிழல் தரும் மரங்களை நட்டு வைக்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறிப்பிட்ட காலங்களுக்கு ஒருமுறை நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்து வருகிறது. மேலும் சாலை விரிவாக்க பணிகளும் நடக்கிறது.

மின்கம்பிகளுக்கு இடையூறு

அந்த நேரங்களில் கம்பீரமாக காட்சி அளிக்கும் மரங்களை எந்திரங்கள் மூலம் வெட்டி தூருடன் அப்புறப்படுத்துகின்றனர். சாலை சீரமைக்கும் பணிகள் பல்வேறு கட்ட பணிகளாக நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 4 வழிச்சாலை என்ற பெயரில் மரங்கள் வெட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஒரு மரத்தை அப்புறப்படுத்தினால் அதற்கு பதிலாக 5 மரங்களை நடவேண்டும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை நட்டு விடுகின்றனர். ஆனால் அதனை சரியாக பராமரிப்பது இல்லை. கும்பகோணம் மயிலாடுதுறை சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்பட்டது. ஆனால் சாலை விரிவாக்கம் காரணமாக ஆலமரம், அரசமரம், புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் மின்கம்பிகளுக்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி மரங்கள் வெட்டப்பட்டன.

சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

இவற்றால் கும்பகோணம்- மயிலாடுதுறை சாலை வசதி மேம்பட்டாலும் அந்த பகுதியில் வெயில் சுட்டெரித்தால் ஒதுங்குவதற்கு சிறிது இடம் கூட இல்லை என்பது மக்களிடையே பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் திருபுவனம் பகுதியில் சாலையோரத்தில் மரங்கள் நன்றாக வளர்ந்து பச்சையாக காட்சி அளித்தது. ஆனால் சாலை விரிவாக்கத்தால் கட்டிடங்கள் வளர்ந்திருக்கிறதே தவிர மரங்களை காணவில்லை. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments