நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.150 கோடி போதைப்பொருள் பறிமுதல்! மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 பேர் கைது!!



நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.150 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார் இதுதொடர்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் இருந்து ‘ஹாசிஸ்’ என்ற விலை உயர்ந்த சர்வதேச போதைப்பொருள் நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக நாகை கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரபூபதி தலைமையில் போலீசார், சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் இடமான வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தேகத்துக்கு இடமாக சொகுசு காரில் வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 2 பேர் தங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த விடுதிக்கு சென்று அந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள், ராமேஸ்வரம் செல்வதற்காக காரில் வந்ததாகவும், சோர்வாக இருப்பதால் ஓய்வெடுக்க வேளாங்கண்ணியில் அறை எடுத்து தங்கியதாகவும் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தனர்.

இதில் சந்தேகம் அடைந்த கியூ பிரிவு போலீசார், அவர்கள் வந்த காரை சோதனை செய்தனர். அதில் காரின் இருக்கைக்கு கீழ் ரகசிய அறை இருப்பதும், அந்த அறையில் பண்டல், பண்டல்களாக ‘ஹாசிஸ்’ எனப்படும் போதைப்பொருள் அடுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கியூ பிரிவு போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து போதைப்பொருள் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அவர்களை நாகை கியூ பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த சுநிட்கவாஷ்(வயது 39), தில்குமார் தப்பாமனோகர்(34) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் டார்ஜிலிங் மலைப்பகுதியில் விளையும் கஞ்சாவை பதப்படுத்தி(பேஸ்ட் போல்) ‘ஹாசிஸ்’ என்ற போதைப்பொருளை தயாரித்து அதனை இலங்கைக்கு படகு வழியாக கடத்தி செல்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

இவர்களுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் செல்போன் வழியாக வழித்தடம்(ரூட் மேப்) போட்டு கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கியூ பிரிவு போலீசார், தேனி மாவட்டத்தை சேர்ந்தவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 75 கிலோ ‘ஹாசிஸ்’ போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என்று கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments