இ-சேவை மையங்களில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து கலெக்டர் எச்சரிக்கை




அரசு இ-சேவை மையங்களில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இ-சேவை மையங்கள்

அரசு இ-சேவை மையங்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள் உள்ளிட்ட சேவைகளுக்கு தமிழ்நாடு மின் ஆளுமை முகமையினால் விண்ணப்பத்திற்கு சேவை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.10-ம், இணைய வழி பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் ரூ.6-ம், சமூக நலத்துறை திருமண நிதியுதவி திட்டம் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நிதியுதவி திட்டத்திற்கு ரூ.120-ம், மாற்றுத்திறனாளி நலத்துறை மாற்றுத்திறனாளி தொடர்பான நலத்திட்டங்களுக்கு ரூ.10-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் இ-சேவை மையங்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட சேவை கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டறியப்பட்டாலோ அல்லது புகார்கள் வரப்பெற்று உறுதி செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தின் அங்கீகாரம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

விலைப்பட்டியல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான விலைப்பட்டியல் அட்டை, அரசு அங்கீகாரம் பெற்றமைக்கான பெயர் பலகை, சேவை மையம் தொடர்பாக புகார் தெரிவிக்க ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மற்றும் 18004256000 முதலியவற்றை பொதுமக்களின் பார்வைக்கு தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து, அருகே உள்ள தாசில்தார் அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களை அணுகி அரசு நிர்ணயித்த சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். சேவை கட்டணத்தினை செலுத்த இ-சேவை மையங்களில் இணையவழி பணபரிவர்த்தனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை பயன்படுத்தி சேவை கட்டணத்தை இணையவழியில் செலுத்தி பயன்பெறலாம்.

தொலைபேசி எண்

சான்றுகளை விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிக சேவை கட்டண வசூல் தொடர்பான புகார்களை tnesevaihelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100, 18004256000 மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments