சேதுபாவாசத்திரம் அருகே உயிரிழந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு




சேதுபாவாசத்திரம் அருகே உயிரிழந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாலிபர் சாவு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ராவுத்தன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் காதர் இப்ராஹிம். இவருடைய மகன் ஜாகிர் உசேன் (வயது32). வௌிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 1 மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊர் வந்துள்ளார். விடுமுறை முடிந்து அவர் மீண்டும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வெளிநாடுக்கு செல்ல இருந்தார்.

இந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் அதிகாலை ஜாகிர் உசேனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை உறவினர்கள், பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜாகிர் உசேன், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தனர். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் உடலை தர முடியும் என்று தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை இன்றி உடலை திரும்ப பெற வேண்டும் என்றால் போலீஸ் நிலையத்தில் தடையில்லா சான்றிதழ் பெற்று வர வேண்டும் என மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

போலீசார் தடையில்லாச் சான்றிதழை தர மறுப்பதாகவும், இதனால் மருத்துவ துறையினர் உடலை தர மறுப்பதாகவும் கூறி ஜாகிர் உசேனின் உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராவுத்தன் வயல் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி தாசில்தார் தெய்வானை, பட்டுக்கோட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தடையில்லா சான்றிதழ் வழங்குவதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உயிரிழந்த ஜாகிர் உசேனுக்கு திருமணமாகி பர்கானா (25) என்ற மனைவியும். ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments