நர்சரி பண்ணையில் விதை விற்பனைக்கு உரிமம் பெறாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை




நர்சரி பண்ணையில் விதை விற்பனைக்கு உரிமம் பெறாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விதை விற்பனை உரிமம்

அரிமளம், அறந்தாங்கி, கறம்பக்குடி, பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தென்னங்கன்றுகள், காய்கறி நாற்றுகள், பழச்செடிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் இவற்றை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் நர்சரி உரிமையாளர்கள், கட்டாயம் விதை விற்பனை உரிமம் பெற்று விற்பனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் 2024-25-ம் நிதியாண்டின் வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் தனியார் நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்படும் பழ மரக்கன்றுகள் எந்த விதையின் மூலம் அல்லது ஒட்டு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற தகவலை கட்டாயம் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு பழமரக்கன்றுடன் உண்மை தன்மை அட்டை பொருத்தவேண்டும். குழி தட்டுகளில் விற்பனை செய்யப்படும் காய்கறி பயிர்களின் நாற்றுகளின் தரத்தினையும் ஆதாரத்தினையும் உறுதி செய்திட குழி தட்டுகளில் ரகம் அல்லது வீரிய ரகம் குறித்த அனைத்து தகவல்களும் உண்மை தன்மை அட்டை பொருத்தி இருக்க வேண்டும்.

ரசீது வழங்குதல்

உண்மை தன்மை அட்டையில் இருக்க வேண்டிய விவரங்கள் முத்திரை எண், பயிரின் பெயர், ரகத்தின் பெயர், விதைத்த நாள் அல்லது பதியம் செய்த நாள், குவியல் எண், நாற்றங்கால் பெயர் மற்றும் முகவரி இருக்க வேண்டும். தென்னங்கன்றுகள், நாற்றுகள் மற்றும் விதை கொள்முதல் விவரங்களை, விதை இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு, நாற்றுகளை விற்பனை செய்யும்போது, பயிர், ரகம், நாற்றங்கால் எண்ணிக்கை, விற்பனை விலை ஆகிய விவரங்களுடன் விவசாயிகளின் கையொப்பத்துடன் ரசீது வழங்க வேண்டும். பழச்செடிகள் மற்றும் தென்னங்கன்றுகள் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யும்போது, அவற்றின் ரகம், விலை குறிப்பிட்டு ரசீது வழங்கி இருப்பு பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

நர்சரி பண்ணை முன்பு, நர்சரியின் பெயர் பலகையும், நாற்றுகள் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் அடங்கிய இருப்பு பலகை முழு விவரங்களுடன் வைக்க வேண்டும். உரிமம் பெறாமல் விதைச்சட்ட விதிகளை பின்பற்றாமல், விதிகளைமீறி விற்பனை செய்யும் விதை விற்பனையாளர்கள் மீது விதை சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். தென்னங்கன்றுகள் மற்றும் நாற்றுகளை விவசாயிகளுக்கு விற்பனை மேற்கொள்ள புதிய உரிமம் பெற விரும்புபவர்கள் தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விதைச்சான்று அங்ககச்சான்று அலுவலக வளாகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பித்து, விதை கட்டுப்பாடு ஆணை கீழ் புதிய உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவா் அதில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments