கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பு




புதுக்கோட்டை கலெக்டா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரிந்து அடங்கியுள்ளன. இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் அந்தந்த நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் அவை மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணி நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

பாதுகாப்பாக வைப்பு

அந்த வகையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதிக்கானவை, கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கானவை, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கானவை, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கானவை என 6 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் ஆகியவை லாரிகளில் பலத்த பாதுகாப்புடன் புதுக்கோட்டைக்கு வந்தன.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கிடங்கில் அவை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments