தொண்டியில் இந்த ஆண்டு முதல் செயல்பட இருந்த அழகப்பா பல்கலைக்கழக கலைக்கல்லூரி, மகளிர் கல்லூரியாக மாற்றம் துணைவேந்தர் அறிவிப்பு
தொண்டி அழகப்பா பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மகளிர் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

மகளிர் கல்லூரியாக மாற்றம்

தொண்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளதாக ஏற்கனவே பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி அறிவித்து இருந்தார். இந்நிலையில் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று தொண்டியில் இந்த ஆண்டு முதல் செயல்பட உள்ள அழகப்பா பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டு உள்ளதாக அழகப்பா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனவே இக்கல்லூரியில் சேர விருப்பம் உள்ள மகளிர் மட்டும் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள்

அதன் அடிப்படையில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், பி.பி.ஏ., பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.காம்., சி.ஏ. போன்ற பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பம் உள்ள மாணவிகள் அழகப்பா பல்கலைக்கழக இணையதளத்தில் தொண்டி கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் சேர்க்கைக்காண விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அழகப்பா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பின்னர் அரசு விதிகளுக்கு உட்பட்டு தரவரிசை பட்டியல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் பல்கலைக்கழக பதிவாளரின் அனுமதி பெறப்பட்டு மாணவிகளுக்கு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். பின்னர் மாணவிகள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் தொண்டி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிக்கு நேரில் சென்று சேர்ந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை கல்லூரி முதல்வர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments