மும்பை விமான நிலைய ஓடு பாதையில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள் இயக்கப்பட்டதால் பரபரப்பு ஊழியர் பணிநீக்கம்




மும்பை விமான நிலைய ஓடு பாதையில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள் இயக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விமான நிலைய கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஒரே ஓடு பாதையில் 2 விமானங்கள்

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையம் நாட்டிலேயே 2-வது பரபரப்பான விமான நிலையம் ஆகும். இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன.

இந்தநிலையில் மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரே ஓடு பாதையில் 2 விமானங்கள் ஒரே நேரத்தில் தரையிறங்கிய, புறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இண்டிகோ விமானம் ஒன்று ஓடுபாதையில் தரையிறங்க, அதே ஓடு பாதையில் சிறிது இடைவெளியில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு செல்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

ஊழியர் பணிநீக்கம்

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. ேமலும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு கண்காணிப்பு கோபுர பணியாளர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரி கூறுகையில், "நாங்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஏற்கனவே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு பணியாளரை பணிநீக்கம் செய்து உள்ளோம்" என்றார்.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஜூன் 8-ந் தேதி இந்தூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் அனுமதி பெற்ற பிறகு தான் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவின் அறிவுறுத்தல்படி தான் விமானி, விமானத்தை தரையிறக்கி உள்ளார். பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். விதிகளின்படி சம்பவம் குறித்து புகார் அளித்து உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பரபரப்பான மும்பை விமான நிலையம் ஒற்றை ஓடுபாதை, 2 குறுக்கு ஓடுபாதைகளுடன் செயல்படுகிறது. சம்பவம் நடந்த ஆர்.டபிள்யு.27 என்ற ஒற்றை ஓடுபாதையில் ஒரு மணி நேரத்துக்கு 46 விமானங்கள் தரையிறங்கி, புறப்பட்டு செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments