296 ரெயில்களின் எண்கள் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு




296 முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களுக்கான எண்கள் பயணிகள் ரெயில்களுக்கான எண்களாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகள் ரெயில்

கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு தெற்கு ரெயில்வேயில் 5 ஆயிரத்து 81 கி.மீட்டர் தொலைவுக்கு 487 பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டன. கொரோனா கட்டுப்பாட்டின் போது இந்த ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் என்ற பெயரில் இயக்கப்பட்டன.

முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக மாற்றப்பட்டதால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் தினசரி பயணிக்கும் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து மெமு, டெமு, பயணிகள் சிறப்பு ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன்பு வசூலித்த பழைய கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களுக்கான எண்கள் வழக்கமான பயணிகள் ரெயில்களுக்கான எண்களாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் இருந்து அனைத்து கோட்ட பொதுமேலாளருக்கும் சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டி எண்கள் மாற்றம்

கொரோனா பரவலுக்கு பின்பு அனைத்து பயணிகள் ரெயிலும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டன. இந்த ரெயில்களின் எண்களும் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன. இந்நிலையில், தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து முன்பதிவில்லா ரெயில்களின் எண்களையும் மாற்றி மீண்டும் 5, 6, 7 என தொடங்கும் பழைய எண்களை அறிவிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 288 பயணிகள் ரெயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரெயில்களின் எண்கள் ஜூலை 1-ந்தேதி முதல் பழைய எண்களைக் கொண்டு இயக்கப்பட உள்ளது.

அந்தவகையில், திருச்சி-ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் 06809 / 06810 என்ற எண்ணுக்கு பதிலாக 56105 / 56106 என்ற எண்ணிலும், விழுப்புரம்-திருச்சி-விழுப்புரம் பயணிகள் ரெயில் 06891/ 06892 என்ற எண்ணுக்கு பதிலாக 56111 / 56112 என்ற எண்ணிலும், திருச்சி-மயிலாடுதுறை-திருச்சி பயணிகள் ரெயில் 06646 / 06645 என்ற எண்ணுக்கு பதிலாக 56700 / 56821 என்ற எண்ணிலும், திருச்சி-காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் 06887/ 06888 என்ற எண்ணுக்கு பதிலாக 76831 / 76834 என்ற எண்ணிலும், திருச்சி-திண்டுக்கல்-திருச்சி பயணிகள் ரெயில் 06499 / 06498 என்ற எண்ணுக்கு பதிலாக 76835 / 76836 என்ற எண்ணிலும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் திருச்சி கோட்டத்தில் 87 ரெயில்கள் உள்பட 288 பயணிகள் ரெயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரெயில்கள் என்று மொத்தம் 296 ரெயில்களின் எண்கள் மாற்றி இயக்கப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments