நடுக்கடலில் தொடரும் அத்துமீறல் ராமேசுவரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு 3 விசைப்படகுகளையும் பறித்துச்சென்ற இலங்கை கடற்படை
நடுக்கடலில் 3 விசைப்படகுகளுடன் ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறைபிடிப்பு

61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்று கடந்த ஒரு சில நாட்களாகத்தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதில் ஜஸ்டின், ரெய்மண்ட், ஹெரின் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் 22 மீனவர்கள் மீன்பிடித்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் 3 ரோந்து படகுகளில் அங்கு வந்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இந்த 3 விசைப்படகுகள், அவற்றில் இருந்த 22 மீனவர்களை சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

பெயர் விவரம்

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

புரூக்ளின் (வயது 35), காளீசுவரன் (40), ராஜ் (46), முருகானந்தம் (24), முத்துக்குமார் (43), சீமோன் (41), சர்ப்ரசாதம் (63), கருப்பையா (47), சுரேஷ்பாபு (40), காளிதாஸ் (30), ரூபின் (35), கண்ணன், நாகராஜ் (34), ராஜேந்திரன் (39), ஜெகன் (29), சகாயம் (61), சந்தியா (24), தீபன் (35), சுதாகர் (42), தீபன் குமார் (44), குமார் (45), செந்தில்வேல் (37) ஆகியோர் என தெரியவந்தது.

இந்த 22 பேரையும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தினர் அதிர்ச்சி

இந்த தகவல் அறிந்ததும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறிய நடவடிக்கைக்்கு மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, படகுகளுடன் அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி உள்ளன.


அனைத்து விசைப்படகு சங்கம்

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா கூறியதாவது:-

61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒருநாள் மட்டுமே மீன் பிடிக்க சென்றிருந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக அடுத்த 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது மீன் பிடிக்க சென்ற 3 விசைப்படகுகள், 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது.

ஏற்கனவே 2 மாத தடைகாலத்தால் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் வருமானம் இன்றி மீனவர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது 22 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆகவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இலங்கை அரசுடன் பேசி படகுகளுடன் 22 மீனவர்களையும் மீட்க வேண்டும். அதே போல் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரையும் மீட்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறையில் அடைப்பு

இதற்கிடையே கைதான மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 5-ந்தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 22 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments