சாயல்குடி அருகே பள்ளத்தில் கார் பாய்ந்தது: பேரக்குழந்தைகளுடன் பெண் பலி 3 பேருக்கு தீவிர சிகிச்சை





சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து பேரன், பேத்தி, பெண் ஆகியோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குற்றாலம் சென்றனர்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது மாலிக் (வயது 35). இவருடைய மனைவி அகமது நிஷா (26). இவர்களுக்கு அஸ்ரின் பாத்திமா (4), அப்ரின் பாத்திமா (3) ஆகிய 2 மகள்கள். சீனி பர்கான் என்ற 8 மாத ஆண் குழந்தையும் உண்டு.

முகமது மாலிக்கின் மாமியார் மாரியூர் கிராமத்தை சேர்ந்த பரிதாபீவி (62).

இந்த நிலையில் முகமது மாலிக் தனது குடும்பத்தினர் மற்றும் மாமியார் பரிதாபீவி ஆகியோருடன் குற்றாலத்துக்கு காரில் சென்றார். அங்கிருந்து ஊருக்கு நேற்று திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை முகமது மாலிக் ஓட்டினார்.

3 பேர் பலி

நரிப்பையூர்-சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உறைகிணறு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்து உருண்டு, பனை மரத்தில் மோதி நொறுங்கியது. இந்த சம்பவத்தில் காருக்குள் இருந்த பரிதாபீவி, இவருடைய பேத்தி அப்ரின் பாத்திமா, பேரனான 8 மாத குழந்தை சீனி பர்கான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உயிருக்கு போராடிய முகமது மாலிக், அகமது நிஷா, அஸ்ரின் பாத்திமா ஆகியோரை சாயல்குடி தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்லால், சாயல்குடி இன்ஸ்பெக்டர் முகம்மது இர்ஷாத் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பலியான 2 குழந்தைகள் உள்பட 3 பேரின் உடல்களை கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments