புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன தமிழகத்தில் முதல்நாளில் 100 வழக்குகள் பதிவாகின மேலும் புதுக்கோட்டையில் 3 வழக்குகள் பதிவாகின




புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று அமலுக்கு வந்தன. தமிழகத்தில் முதல்நாளில் 100 வழக்குகள் பதிவாகின.

ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள்

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக 3 விதமான சட்டங்களை இயற்றி அமல்படுத்தி இருந்தனர்.

அதன்படி இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐ.இ.சி.) ஆகிய சட்டங்கள் அமலில் இருந்தன.

இந்தியா சுதந்திரம் அடைந்து ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு சென்ற பிறகும் அவர்கள் இயற்றிய சட்டங்கள்தான் அமலில் இருந்தன.

புதிய சட்டங்கள்

பிரதமர் மோடி மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர், நமது நாட்டின் குற்றவியல் நடைமுறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்ய முடிவு செய்தார்.

அதாவது ஆங்கிலேயர் காலத்து குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக தற்போதைய காலத்துக்கு ஏற்ப 3 புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக முக்கிய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும், போலீஸ் நிலையங்களை சாமானியர்கள் எளிதில் அணுகுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்த புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.

அமலுக்கு வந்தன

அதன்படி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த 3 சட்டங்களுக்கும், பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

தமிழகத்திலும் இந்த புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தன. புதிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக தமிழக போலீஸ் துறையினருக்கு ஏற்கனவே ஒரு மாத காலம் தீவிர பயிற்சி கொடுக்கப்பட்டது.

சென்னையில் ஒவ்வொரு இணை கமிஷனர் தலைமையிலும் கடந்த மாதம் தீவிர பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. சென்னையில் நேற்று செல்போன் பறிப்பு சம்பவத்தில் மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

100 வழக்குகள்

மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் நேற்று தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு தொடங்கி விட்டது. அந்த வகையில் சென்னை, தாம்பரம், ஆவடி கமிஷனரகங்களில் மட்டும் 10 வழக்குகள் நேற்று பாய்ந்தன.

சென்னையில் மடிப்பாக்கம், துரைப்பாக்கம், நந்தம்பாக்கம், கோட்டூர்புரம், ஆயிரம்விளக்கு மற்றும் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கு வீதம் மொத்தம் 6 வழக்குகள் பதியப்பட்டன.

ஆவடி கமிஷனரகத்தில் சோழவரம், காட்டூர் ஆகிய போலீஸ்நிலையங்களில் தலா ஒரு வழக்கு போடப்பட்டது. தாம்பரம் கமிஷனரகத்திலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிய வந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 100 வழக்குகள் பதியப்பட்டதாக டி.ஜி.பி. அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மடிப்பாக்கம், துரைப்பாக்கம், கோட்டூர்புரம், சோழவரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் மர்ம மரணங்கள் சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பழைய சட்டத்தின்படி 174 சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டது. தற்போதைய புதிய சட்டத்தின்படி 194 சட்டப்பிரிவின் கீழ் இந்த வழக்குகள் பதிவாகி உள்ளன.

சென்னையில் முதல் வழக்கு

வட மாநில சகோதரர்கள் 2 பேரிடம் இருந்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் செல்போன் பறித்தது தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில், மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இணை கமிஷனர் தர்மராஜன் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு நேரடியாக சென்று உரிய அறிவுரைகளை வழங்கினார். அதன்படி சென்னையில் முதல் வழக்காக செல்போன் பறிப்பு சம்பவம் வழிப்பறி வழக்காக பதிவு செய்யப்பட்டது.

வேறுபாடு என்ன?

புதிய சட்டத்தின்படி 304 (2) என்ற சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் வழிப்பறி சம்பவத்துக்கு பழைய சட்டத்தின்படி 392 சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று முதல் கொடுக்கப்படும் புகார் மனுக்களுக்கு மட்டும் புதிய சட்டம் பயன்படுத்தப்படும் என்றும், ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுக்களுக்கு தற்போது வழக்குப்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டால் பழைய சட்டப்பிரிவுகளின் கீழ் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் பிடித்தவர் கைது

இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி நடேசன் சாலை பகுதியில் 25 வயது இளம்பெண் குளித்துக் கொண்டிருந்ததை அதே பகுதியை சேர்ந்த சாரதி (21) என்ற வாலிபர் தனது செல்போனில் படம் பிடித்ததாக ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாரணி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். சாரதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது புதிய சட்டத்தின்படி 77 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பழைய சட்டத்தின் கீழ் இந்த சம்பவம் 354 சி பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற மாவட்டங்களில்...

இதேபோல் புதிய குற்றவியல் சட்டத்தின்படி கோவையில் 3 வழக்குகளும், திருச்சியில் ஒரு வழக்கும், தேனியில் 3 வழக்குகளும், திருப்பூரில் 2 வழக்குகளும், கடலூரில் 3 வழக்குகளும், விழுப்புரத்தில் 2 வழக்குகளும், கள்ளக்குறிச்சியில் ஒரு வழக்கும், நெல்லையில் 6 வழக்குகளும், தூத்துக்குடியில் 2 வழக்குகளும், ஈரோட்டில் 2 வழக்குகளும், சேலத்தில் 3 வழக்குகளும், நாமக்கல்லில் ஒரு விபத்து வழக்கும், குமரி மாவட்டத்தில் 4 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இதுதவிர வேலூர், திருவண்ணாமலையில் தலா ஒரு வழக்கும் பதிவாகியுள்ளன. இதேபோல் கர்நாடகத்தில் நேற்று 2 வழக்குகள் புதிய சட்டத்தின்படி பதிவாகி உள்ளன.

புதிய சட்டத்தின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை நேர நிலவரப்படி ஒரே நாளில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 29). இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 174 என முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததை தற்போது புதிய சட்டத்தில் பி.என்.எஸ்.எஸ். 194 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல அன்னவாசல் அருகே 3 யூனிட் மணல் கடத்தி வரப்பட்ட லாரியை பறிமுதல் செய்தது தொடர்பாக அன்னவாசல் போலீசார் புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர். இதில் பி.என்.எஸ்.303 பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர். இந்த சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமாம். அதே நபர் மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபட்டால் சிறை தண்டனை 5 ஆண்டுகளாகுமாம். இதற்கு முன்பு பழைய சட்டத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையாக தான் இருந்தது என போலீசார் தெரிவித்தனர். இதேபோல மற்றொரு போலீஸ் நிலையத்தில் புதிய பிரிவின் கீழ் வேறு ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments