ஆமை வேகத்தில் நடக்கும் நாகை-விழுப்புரம் நான்கு வழிச்சாலை பணிகள் விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை




ஆமை வேகத்தில் நடந்து வரும் நாகை-விழுப்புரம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகரிக்கும் வாகன போக்குவரத்து

நாட்டில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும் அதிக அளவில் சாலை விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே பெருகி வரும் வாகனத்திற்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்தவும், புதிய சாலைகள் அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

சிமெண்டு சாலை

அந்த வகையில் ரூ.6 ஆயிரத்து 341 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட நாகை-விழுப்புரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள், 190 கிலோ மீட்டர் தொலைவில் போடப்பட்டு வருகிறது. இந்த சாலை 134 கிராமங்களை கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 180 கிலோமீட்டர் தூரம் சிமெண்டு சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சாலை நாகை-சட்டநாதபுரம், சட்டநாதபுரம்-பூண்டியாங்குப்பம், பூண்டியாங்குப்பம்-புதுச்சேரி, புதுச்சேரி-விழுப்புரம் என நான்கு பகுதிகளாக பிரித்து டெண்டர் விடப்பட்டு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

50-க்கும் மேற்பட்ட பாலங்கள்

இந்த சாலையானது நாகையில் இருந்து காரைக்கால், சிதம்பரம், அன்னவல்லி, ராமாபுரம், தோட்டப்பட்டு, தென்னல், கொங்கராம்பாளையம், வளவனூர் வழியாக விழுப்புரத்தை சென்றடைகிறது.

காரைக்கால், திருக்கடையூர், புவனகிரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் புறவழிச்சாலையாக போடப்பட்டு வருகிறது. இதில் சிறிய மற்றும் பெரிய என 50-க்கும் மேற்பட்ட பாலங்களும், 11 ரெயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது.

ஆமை வேகத்தில் நடக்கிறது

கடந்த 2022-ம் ஆண்டு இந்த பணிகள் அனைத்தும் முடிந்திருக்க வேண்டும். ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி, மண் எடுப்பதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது வரை நாகை-விழுப்புரம் சாலை பணிகள் முடிவடையாமல் இருந்து வருகிறது.

குறிப்பாக நாகை-சட்டநாதபுரம் பிரிவு சாலை பணிகள் 45 சதவீதம் மட்டுமே முடிந்து உள்ளது. ஆமை வேகத்தில் நடக்கும் இந்த சாலை பணிகளின் காரணமாக போக்குவரத்து நெரிசல், பயண நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தான்டி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.

விரைந்து முடிக்க கோரிக்கை

எனவே நாகை-விழுப்புரம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிறைவடைந்துள்ளது

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட பொறியாளர் சக்திவேல் கூறியதாவது:-

நாகை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விழுப்புரம்-புதுச்சேரி இடையிலான 29 கிலோ மீட்டர் தூரத்தில் 95 சதவீதத்திலும், புதுச்சேரி-பூண்டியாங்குப்பம் இடையிலான 38 கிலோ மீட்டர் தூரத்தில் 87 சதவீதத்திலும், பூண்டியாங்குப்பம்-சட்டநாதபுரம் இடையிலான 56.8 கிலோமீட்டர் தூரத்தில் 98 சதவீதத்திலும், சட்டநாதபுரம்-நாகை இடையிலான 55.75 கிலோமீட்டர் தூரத்தில் 45 சதவீதமும் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது.

நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை

நிலம் கையகப்படுத்தும் பணி, மண் எடுக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலை அமைக்கும் பணிகள் தாமதம் ஆகிவிட்டது. தற்போது ஒப்பந்ததாரருக்கு பணிகள் மேற்கொள்ள மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம்-புதுச்சேரி, புதுச்சேரி-பூண்டியாங்குப்பம், பூண்டியாங்குப்பம்-சட்டநாதபுரம் சாலை பணிகள் அடுத்த மாதத்துக்குள்(ஆகஸ்டு) முடிவடைந்து விடும்.

மேலும் நாகை-விழுப்புரம் சாலை ட்ரம்பெட் பாலம் அமைய உள்ள புத்தூர் ரவுண்டானா அருகில் இருந்து, புதிதாக அமைக்கப்பட்ட நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதமாக புதிய அணுகு சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாகை-விழுப்புரம் நான்கு வழிச்சாலை பணிகள் விரைவாக நிறைவடைந்தால் புதுச்சேரி, சென்னைக்கு விரைவாக செல்லலாம். தற்போது நாகையில் இருந்து சென்னை செல்ல 8 மணி நேரம் ஆகிறது. ஆனால் நாகை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிவடையும் பட்சத்தில் 5 மணி நேரத்துக்குள் சென்னை செல்லலாம். போக்குவரத்து நெரிசல், பயண நேரம் குறையும். மேலும் விபத்துகளின் எண்ணிக்கையும் கட்டுக்குள் வரும். இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் பட்சத்தில், நாகை-தூத்துக்குடி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்க ஏதுவாக இருக்கும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments