புதுக்கோட்டை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு: காத்திருப்பு போராட்ட அறிவிப்பால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு போலீசார் பேச்சுவார்த்தையால் திரும்பி சென்றனர்




புதுக்கோட்டை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டதில் பரபரப்பானது. போராட்டம் நடத்த வந்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் திரும்பி சென்றனர்.

மாநகராட்சியாக தரம் உயர்வு

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளூர், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், 9 ஏ நத்தம் பண்ணை உள்பட 11 ஊராட்சிகள் புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் பகுதி ஊராட்சி நிர்வாக அமைப்பில் தொடர வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டக்குழு சார்பாக கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் போராட்டம் நடத்த வருபவர்களை கைது செய்வதற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு நேற்று போடப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டால் அவர்களை அழைத்து செல்ல அரசு பஸ்களும், போலீஸ் வாகனங்களும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக வேண்டாம் மாநகராட்சி கூட்டமைப்பை சோ்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தனர். அவா்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போராட்டத்திற்கு அனுமதி இல்லையெனவும், பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே மனு அளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக அதிகாரிகள் பதில் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் போராட்டம் நடத்த முயலகூடாது என போலீசார் தெரிவித்தனர்.

திரும்பி சென்றனர்

இதே அமைப்பை சோ்ந்தசிலரும் கூட்டமாக வந்தனர். அவர்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை எடுத்துக்கூறினர். அதன்பின் அவர்கள் போராட்டம் நடத்தாமல் திரும்பி சென்றனர்.

இந்த காத்திருப்பு போராட்ட அறிவிப்பால் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பரபரப்பாக காணப்பட்டது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மற்ற பொதுமக்களையும் நுழைவு வாயிலில் பலத்த சோதனை செய்து அனுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments