தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக்கோரி அரசு பள்ளியை திறக்கவிடாமல் பெற்றோர், பொதுமக்கள் போராட்டம் அறந்தாங்கி அருகே பரபரப்பு




அறந்தாங்கி அருகே தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக்கோரி அரசு பள்ளியை திறக்கவிடாமல் பெற்றோர், பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் ஒருவரையும் பணியிட மாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோர் நேற்று காலை பள்ளி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியில் வகுப்பறைகள், தலைமை ஆசிரியை அறையை திறக்கவிடவில்லை. இதனால் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். ஆசிரியர்களும் பள்ளியின் வெளியே நின்றனர்.

பேச்சுவார்த்தை

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் மற்றும் வருவாய்த்துறை, கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் ஒருவர் பள்ளியில் மாணவ-மாணவிகளை தகாத வார்த்தையால் திட்டுவதாகவும், மாற்றுச்சான்றிதழை வாங்கி செல்லுமாறு சில மாணவர்களை வற்புறுத்துவதாகவும், ஆசிரியர்களை ஒருமையில் பேசி வருவதாகவும், இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் அவர்கள் 2 பேரையும் பணியிட மாற்றம் செய்யக்கோரி ஏற்கனவே பல முறை கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள், பெற்றோர் கலைந்து சென்றனர்.

பள்ளி திறக்க தாமதம்

இந்த போராட்டத்தின் காரணமாக பள்ளி திறப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. காலை 10.15 மணிக்கு பள்ளி திறக்கப்பட்டது. அதன்பின் வகுப்பறைக்குள் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments