மின்தடை புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை: எஸ்எம்எஸ் வசதி தொடக்கம்




சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 9498794987 என்ற செல்போன் எண்ணில், மின்தடை, மின் மீட்டர் பழுது என மின்சாரம் தொடர்பான அனைத்துப் புகார்களையும் தெரிவிக்கலாம்.

இந்த மின்னகத்தில் ஒரு ஷிப்ட்டுக்கு 60 பேர் என, 3 ஷிப்ட்-களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், 24 மணி நேரமும் புகார்களைப் பெறுகின்றனர்.

மின்னகத்தில் அளிக்கப்படும் புகார்கள் அங்குள்ள கணினியில் பதிவு செய்யப்படுகிறது. பின்னர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டுஅறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அங்கிருந்து சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலக உதவிப் பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

இதனால், உதவிப் பொறியாளருக்கு தகவல் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக, மின்னகத்தில் புகார் செய்யப்பட்ட உடனே உதவிப் பொறியாளரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் புகார் அளிக்கும் போது மின் இணைப்பு எண், பதிவு செய்த செல்போன் எண்ணை மின்னகத்தில் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில், அந்த இணைப்புக்கு உரிய அலுவலகப் பொறியாளரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர் நடவடிக்கை எடுத்து, அந்த விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்மூலம், மின்னகத்தில் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments