உயர் அழுத்தம் காரணமாக ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!!





உயர் அழுத்தம் காரணமாக ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

துணை மின் நிலையம்

ஆதனக்கோட்டையில் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோவில், வளவம்பட்டி, சோத்துப்பாளை, வாராப்பூர், மின்னாத்தூர், மனவிடுதி, பெருங்களூர் ஆகிய வழித்தடங்களில் பல்வேறு கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் உயர் அழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு மளமளவென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அப்பகுதியில் 50 அடி உயரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் பல்வேறு கிராமங்களில் மின்வினியோகம் தடைபட்டது.

தீயில் எரிந்து நாசம்

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் மின்மாற்றி முழுவதுமாக எரிந்து நாசமானது.

மேலும், பல லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது.

இதையடுத்து, திருச்சி மண்டல முதன்மை பொறியாளர் சேகர், புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மின்வினியோகம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அருகே உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

தீ விபத்தில் சேதம் அடைந்த மின்மாற்றியை மாற்ற ஒருவார காலம் ஆகும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments