கவிநாடு கண்மாயில் கருவேல மரங்களை அகற்றும் பணி 60 சதவீதம் நிறைவு! மணல் குன்றுகள் அமைத்து மரக்கன்றுகள் நட திட்டம்!!




கவிநாடு கண்மாயில் கருவேல மரங்களை அகற்றும் பணி 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மணல் குன்றுகள் அமைத்து மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

கவிநாடு கண்மாய்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய கண்மாயாக கவிநாடு கண்மாய் உள்ளது. இங்கு கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்த நிலையில், இதனை அகற்றிவிட்டு கண்மாயை தூா்வார மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் இப்பணியில் இணைந்து பணி மேற்கொள்கின்றனர். இதில் கண்மாயில் கரைப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் பெருமளவு அகற்றப்பட்டு விட்டன.இதேபோல் கவிநாடு கண்மாய்க்கு தண்ணீர் வரக்கூடிய வரத்து வாரிகள் பகுதிகளிலும் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிட்ட அளவு பணிகள் நிறைவடைந்துள்ளன.

மணல் குன்றுகள்

இந்த நிலையில் கவிநாடு கண்மாயில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகள் பணிகள் குறித்து எடுத்துக்கூறினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- கவிநாடு கண்மாயில் கருவேல மரங்களை அகற்றும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து பணிகள் நடைபெறுகிறது. 3 இடங்களில் மணல் குன்றுகள் அமைக்க திட்டமிடப்பட்டு, 2 இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளது.இந்த மணல் குன்றுகளில் பறவைகள் அமரக்கூடிய வகையில் பழ வகைகள் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த மணல் குன்றுகள் அமைப்பதற்காக கண்மாயில் மண் தோண்டப்பட்டு ஆழப்படுத்தி உள்ளோம். இதன் மூலம் நீர் தேக்கமும் அதிகரிக்கும்.

சுற்றுலா தலம்

இதேபோல் கவிநாடு கண்மாயில் கரைகளும் பலப்படுத்தப்படுகிறது. கரைகளிலும் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற உள்ளது. மேலும் கவிநாடு கண்மாயை ஒரு சுற்றுலா தலமாகவும் மாற்ற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் 3-வது மணல் குன்றில் மக்கள் சென்று வரும் வகையில் அமைக்கப்படும். கண்மாயின் கரையும் மரக்கன்றுகள் நடுவதின் மூலம் அழகாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.புதுக்கோட்டை மாவட்டத்தை சீமைக்கருவேல மரங்கள் இல்லா மாவட்டமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments