பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 31-ந் தேதி கடைசி நாள்




பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசி நாளாகும்.

பயிர் காப்பீடு திட்டம்

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2024-25-ம் ஆண்டிற்கு நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ரூ.35,600. விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரீமியத்தொகை ஏக்கருக்கு ரூ.712 ஆகும். மக்காச்சோளத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ரூ.29,400 ஆகும்.

விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரீமியத்தொகை ஏக்கருக்கு ரூ.588 ஆகும். நிலக்கடலைக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ரூ.28,300 ஆகும். விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரீமியத்தொகை ஏக்கருக்கு ரூ.566 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

31-ந் தேதி கடைசி நாள்

கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். நெல்லிற்கு வருவாய் கிராம அளவிலும், மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலைக்கு குறுவட்ட பிர்கா அளவிலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நடப்பு குறுவை, காரிப் பருவத்தில் நெல், மக்காச்சோளம், நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும்.

கூட்டுறவு கடன் சங்கங்கள்

இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் 1434-ம் பசலிக்கான சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத் தொகையினை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது வணிக வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ காப்பீடு செய்து அதற்குரிய ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்கள், வருவாய் கிராமங்கள் மற்றும் குறுவட்ட விவரங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தினையோ அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தினையோ விவசாயிகள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மொ்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments