நாகை-திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி-பட்டுக்கோட்டை- தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் கிடப்பில் போடப்பட்ட அகல ரெயில்பாதை திட்டங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தொடங்கப்படாத பணிகளுக்கு பட்ஜெட்டில் விடிவு காலம் பிறக்குமா?




நாகை-திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி-பட்டுக்கோட்டை-தஞ்சை அகல ரெயில்பாதை திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தொடங்கப்ர்தம பணிகளுக்கு இந்த பட்ஜெட்டிலாவது விடிவு காலம் பிறக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரெயில் பயணங்கள்

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்யும் ரெயில்வே துறையும் ஒன்று. பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில், விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், ஜன சதாப்தி, சதாப்தி, இன்டர்சிட்டி, வந்தேபாரத் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அம்ரித் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 18 ரெயில் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்தும், இந்த வழியாகவும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில் புதிய அகல ரெயில்பாதை திட்டங்களும் அறிவிக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் முடிந்த நிலையிலும், நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையிலும் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் இன்னும் நடைபெறாமல் உள்ளது.

நாகை-திருத்துறைப்பூண்டி

அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடக்கும் திட்டங்களான நாகை-திருத்துறைப்பூண்டி (திருக்குவளை வழியாக), மன்னார்குடி-பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை-தஞ்சை அகல ரெயில்பாதை திட்டங்களும் அடங்கும்.

கடந்த 2009-ம் ஆண்டு நாகை-திருத்துறைப்பூண்டி இடையே அகல ரெயில்பாதை திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. நாகை, பாபாக்கோவில், திருக்குவளை, பாலகுறிச்சி, செம்பியன்மகாதேவி வழியாக திருத்துறைப்பூண்டிக்கு 33½ கி.மீட்டருக்கு அகல ரெயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த ரெயில்பாதையில் 11 பெரிய பாலங்கள், 74 சிறிய பாலங்கள், 32 ரெயில்வே கிராசிங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது

இதில் நாகை-திருத்துறைப்பூண்டி ரெயில்வே வழித்தடத்துக்கு 100 சதவீதம் நிலம் ஆர்ஜிதபடுத்தும் பணிகள் முடிவடைந்து இந்த வழித்தடத்தில் ரெயில்வே தண்டவாளம் அமைப்பதற்காக சிலபாலம் உள்ளிட்ட பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. ஆனால் தண்டவாளம் அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மன்னார்குடி-பட்டுக்கோட்டை

மன்னார்குடி-பட்டுக்கோட்டை அகல ரெயில்பாதை திட்டம் 42 கி.மீ. தூரத்தில் அமைகிறது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய இரு மாவட்டங்களை சேர்ந்த 21 கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்த வழித்தடத்தில் கண்ணன் ஆறு, பாட்டுவனாச்சி, நசுவினி ஆறு போன்ற காட்டாறுகளும், பாமினியாறு, கல்யாண ஓடை வாய்க்கால், தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால் போன்ற பாசன வாய்க்கால்களும் உள்ளன. இவற்றின் குறுக்கே 7 ஆற்றுப்பாலங்கள் புதிய ரெயில் பாதைக்காக கட்டப்பட வேண்டும்.

பட்டுக்கோட்டை-தஞ்சை வழித்தடம்

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் புனித தலங்கள் எங்கெல்லாம் உள்ளதோ? அவற்றை இணைக்கும் வகையில் ரெயில்பாதைகள் அமைக்கப்பட்டன. அதனடிப்படையில்தான் பட்டுக்கோட்டை-தஞ்சை ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு 1932-ம் ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டு சர்வே செய்து எல்லை கற்கள் நடப்பட்டன. பின்னர் 1946-ம் ஆண்டு அந்த திட்டம் லாபம் தருமா? என்பதன் அடிப்படையில் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் 2000-ம் ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்து ரூ.101 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் திட்டத்தை முடிக்க ரெயில்வே முடிவு செய்தது. பின்னர் அதுவும் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு பட்ஜெட்டில் பட்டுக்கோட்டை-தஞ்சை ரெயில் திட்டத்திற்கு 47.2 கி.மீ. தூரத்துக்கு ரூ.290 கோடி மதிப்பீல் செயல்படுத்த ரெயில்வே துறையால் அனுமதிக்கப்பட்டு நில அளவையும் செய்யப்பட்டு பாப்பாநாடு, ஒரத்தநாடு, உளூர் ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

பின்னர் அதுவும் கிடப்பில் போடப்பட்டது. 92 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த திட்டப்பணிகளுக்கு தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப கூடுதல் நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் செய்ய வேண்டும் என்பதே டெல்டா மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

இரட்டை ரெயில் பாதை

இதேபோல் தஞ்சையில் இருந்து விழுப்புரம் வரையிலான இரட்டை பாதை திட்டம், தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை இரட்டை பாதை திட்டங்களுக்கும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்-அரியலூர்-நாமக்கல் புதிய பாதை திட்டம், கும்பகோணம்-ஜெயங்கொண்டம் புதிய பாதை திட்டங்களும் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த புதிய பாதை திட்டங்களை தொடங்குவதற்கான அனுமதி இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதேபோல் ஏற்கனவே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த மயிலாடுதுறை-தரங்கம்பாடி வழித்தடங்கள் அகலப்பாதை திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளதால் இந்த திட்டத்திற்கும் இந்த நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என டெல்டா மாவட்ட மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நாகை-திருத்துறைப்பூண்டி ரெயில்பாதை: கருணாநிதியின் கனவுத்திட்டம் நிறைவேறுமா?

நாகூர்-நாகை ரெயில் உபயோகிப்பாளர் நலச்சங்க செயலாளர் நாகூர் சித்திக் கூறும்போது, நாகை-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதை திட்டம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டம் ஆகும். 2009-ம் ஆண்டு ரூ.126 கோடி மதிப்பில் ஆரம்பிக்கப்பட்ட நாகை-திருத்துறைப்பூண்டி திட்டத்தின் அடித்தளமான பெரிய பாலங்கள் அமைக்கும் பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. இந்த திட்டம் ஆரம்பித்தபோது 3, 4 ஆண்டுகளில் முடியும் என தகவல்கள் வந்தது. ஆனால் தற்போது 15 வருடங்களாகியும் இந்த பணிகள் முடிவடையாமல் உள்ளது. கருணாநிதியின் கனவு திட்டம் வெறும் கனவாகவே முடிவடையுமோ? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாகை-திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம்-அகஸ்தியம்பள்ளி ரெயில் பாதைகள் நேரடியாக இணையும். நாகை-திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை-அறந்தாங்கி-காரைக்குடி மார்க்கமாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு திருவாரூருக்கு மாறி போகாமலேயே நேராக செல்லலாம். தென் மாவட்டத்தை நேரடியாக இணைக்கும் ரெயில் பாதையாக மாறிவிடும் என கூறினார்.

ரெயில்வே வாரிய தலைவர், அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்- முரசொலி எம்.பி.
 

தஞ்சை எம்.பி. முரசொலி கூறுகையில், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி மக்களின் குறைகளை நான் ரெயில்வே வாரிய தலைவர், தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோரை சந்தித்து நிறைவேற்றித்தருமாறு வலியுறுத்தி உள்ளேன். அதன்படி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை பட்டுக்கோட்டை, பேராவூரணி மக்களின் கோரிக்கைப்படி தினமும் இயக்க வேண்டும். தாம்பரம்- செங்கோட்டை ரெயிலை பேராவூரணி, அதிராம்பட்டினம் ரெயில் நிலையங்களில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூரில் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.

தஞ்சை-பட்டுக்கோட்டை-மன்னார்குடி ரெயில் வழித்தடத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி உள்ளேன். இதபோன்று தஞ்சை- அரியலூர் வழித்தடம், தஞ்சை-புதுக்கோட்டை ரெயில் வழித்தடத்தையும் ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் என கூறினார்.

மன்னார்குடி-பட்டுக்கோட்டை ரெயில்பாதை: 10 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் திட்டம் உயிர்பெறுமா?

தென்னக ரெயில்வே ஊழியர் சங்க முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், 41 கி. மீ தூரமான மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரெயில்பாதை திட்டத்திற்கு 2011-12-ம் நிதியாண்டு ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் தந்தது. மயிலாடுதுறை-காரைக்குடி அகலப்பாதை விரிவாக்கத்தில் இத்திட்டம் இடம் பெறுகிறது. 196 எக்டேர் நிலம் இத்திட்டத்திற்கு தேவை. திட்ட மதிப்பு ரூ.216 கோடி என கணக்கிடப்பட்டது. வழித்தடத்தில் பரவாக்கோட்டை மற்றும் மதுக்கூரில் ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. 2012-ம் ஆண்டு சுமார் ரூ.8.5 கோடி மதிப்பில் பாமினியாறு, ரூ.8.2 கோடி மதிப்பில் கண்ணனாறு, ரூ.7.27 கோடி மதிப்பில் நசுவிணியாறு பாலங்கள் கட்ட டென்டர் விடப்பட்டு 2013-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 2019-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்து பின்பு 2025 என ரெயில்வே வாரியம் திருத்தியமைத்தது. திட்ட மதிப்பு தற்போது 330 சதவீதம் கூடியிருக்கிறது. நிதியாண்டு 2013-14 க்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக இத்திட்டத்திற்கு எந்த நிதி ஒதுக்கீடும் கிடைக்கவில்லை. தூண்கள் அமைக்கப்பட்டதோடு பாலங்கள் கட்டுமான பனிகளும் நின்று விட்டன. இந்த திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.161 கோடி போதுமானது அல்ல. நாளைய பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் பட்சத்தில், பத்து ஆண்டுகளாக முடங்கி கிடந்த மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரெயில் பாதை திட்டம் மீண்டும் உயிர்பெறும்.

தஞ்சை-பட்டுக்கோட்டை ரெயில்பாதை: மக்களின் 92 ஆண்டுகால ஏக்கம் தீருமா?

தஞ்சை ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் கூறுகையில், தஞ்சை-பட்டுக்கோட்டை வழித்தடம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்துள்ளது. அதன் பின்னர் 92 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டில் இந்த திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்து ரூ.101 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் 2013-14-ம் ஆண்டில் 47.2 கி.மீ. தூரம் உள்ள இந்த திட்டத்திற்கு ரூ.290 கோடி மதிப்பில் செயல்படுத்த ரெயில்வே துறை அனுமதி அளித்து நில அளவையும் செய்யப்பட்டது. மேலும் பாப்பநாடு, ஒரத்தநாடு, உள்ளூர் ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதுவும் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயம் மட்டும் அல்ல, இந்த பகுதி தொழில்வளம் நிறைந்த பகுதியாக முன்னேறும் என கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments