மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்களை நிலுவையில் வைக்கக்கூடாது; அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும் முதல் நாளில் கலெக்டர் அருணா அதிரடி உத்தரவு




மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நிலுவையில் வைக்கக்கூடாது, அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும் என முதல் நாளில் கலெக்டர் அருணா அதிரடி உத்தரவிட்டார்.

கலெக்டரின் முதல் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை கலெக்டராக அருணா பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகும். கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்தார்.

அதன்பின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள், முதல்வரின் முகவரி திட்ட மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டன. அப்போது எந்தெந்த துறையில் மனுக்கள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருப்பதை கேட்டறிந்த கலெக்டர் அருணா, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அது குறித்து விளக்கம் கேட்டார்.

மனுக்கள் மீது நடவடிக்கை

இந்த கூட்டத்தில் கலெக்டர் அருணா பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், முதல்வரின் முகவரி திட்டத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை நிலுவையில் வைக்கக்கூடாது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறு தீர்வு காண முடியாவிட்டால் அதற்கான விளக்கத்தை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி தான் வர வேண்டும். மற்ற அலுவலர்களை துறை அதிகாரிகள் அனுப்பி வைக்க கூடாது. அவ்வாறு மற்ற அலுவலர்கள் வந்தாலும் அவர்கள் நிலுவையில் உள்ள மனுக்கள் விவரம், அதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்திருக்க வேண்டும். பெயரளவுக்கு அலுவலர்கள் வந்து விட்டு செல்லக்கூடாது.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

ஒவ்வொரு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். நிலுவையில் வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட மனுவையும் வைத்து பதில் சொல்ல வேண்டும். முடித்துவிடுவேன் என சொல்லிவிட்டு மட்டும் போகக்கூடாது. எந்த மனுக்களையும் நிலுவையில் வைக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கலெக்டரின் இந்த அதிரடி உத்தரவை அரங்கத்தில் இருந்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். கூட்டத்தில் திருக்கோகர்ணத்தில் விநாயகர் கோவில் நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட பிரகாஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 501 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யா தேவி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளிடம் கனிவோடு பேசிய கலெக்டர்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற தனி அறை உள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை அவர்களது இருக்கைக்கே கலெக்டர் அருணா சென்று வாங்கினார். அப்போது மாற்றுத்திறனாளிகளிடம் நலம் விசாரித்து, என்ன செய்கிறீர்கள் என்று அவர்களது கோரிக்கையை கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவோடு பேசினார். இதில் மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி கடிகாரம், தையல் எந்திரங்கள், மடக்கு சக்கர நாற்காலிகள் உள்பட ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 500 மதிப்பிலான உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் அருணா வழங்கினார். அவர்களுக்கு கைக்கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தார். புதிய கலெக்டரின் இந்த செயலை கண்டு மாற்றுத்திறனாளிகள் முகம் மலர்ந்தனர்.

பழுது சரி செய்யப்படாத பேட்டரி கார்
மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், பார்வையற்றவர்கள் உள்பட பொதுமக்கள் மனு அளிக்க வரும்போது கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் இருந்து மனுக்கள் எழுதும் இடம் வரை பேட்டரி கார் இயக்கப்பட்டது. இ்ந்த பேட்டரி கார் பழுதால் இயக்கப்படாமல் உள்ளது. பழுதை சரி செய்து இயக்க மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இன்னும் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. பேட்டரி காரை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments