புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆணையர் ஆய்வு




புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையருமான சுந்தரவல்லி தலைமை தாங்கினார். கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பதிவு செய்யப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தமிழ் புதல்வன் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் குறித்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள மாணவர்களின் விபரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசுப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை, ஆணையா் சுந்தரவல்லி பார்வையிட்டார். இந்நிகழ்வுகளில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments